Home One Line P1 “திருடிய பணத்தில் பாதியைத் திருப்பிக் கொடுத்து விட்டு ரிசா விடுதலையாகியிருக்கிறார்” – மகாதீர் மீண்டும் சாடல்

“திருடிய பணத்தில் பாதியைத் திருப்பிக் கொடுத்து விட்டு ரிசா விடுதலையாகியிருக்கிறார்” – மகாதீர் மீண்டும் சாடல்

746
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் விடுதலையாகியிருக்கும் ரிசா அசிஸ் மீது தொடர்ந்து தனது சாடல்களைத் தொடர்ந்து வருகிறார் துன் மகாதீர்.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் கணவருக்குப் பிறந்தவர்தான் ரிசா அசிஸ்.

ஜோ லோவின் நண்பருமான ரிசா அசிஸ் தான் திருடிய பணத்தில் பாதியை மட்டும் திருப்பித் தந்துவிட்டு, குற்றமில்லாதவராக விடுதலையாகியிருக்கிறார் என்றும் மகாதீர் சாடியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“சில முக்கியத் தகவல்களையோ, அல்லது சொத்துகளையோ திருப்பித் தந்துவிட்டு குற்றத்திலிருந்து வெளியாகும் நடைமுறை நமது நாட்டில் எப்போதும் பின்பற்றப்படுவதில்லை. அமெரிக்காவில் மட்டுமே இது சாத்தியம். ‘பிளி பார்கேய்ன்’ (Plea bargain) என இந்த நடைமுறை அழைக்கப்படுகிறது. அதிலும் கொடுக்கின்ற தகவல்கள் மூலம் மேலும் கூடுதலான திருட்டுப் பணத்தை அரசாங்கம்  திரும்பப் பெற முடியும் என்ற சாத்தியம் இருக்க வேண்டும். ஆனால், திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பது இந்த நடைமுறைக்குள் வராது. அதிலும் திருடிய பணத்தில் பாதியை மட்டும் திருப்பிக் கொடுக்கும் நடைமுறை இதுவல்ல” என்றும் மகாதீர் விளக்கினார்.

இதுகுறித்து இன்று வியாழக்கிழமை (மே 21) தனது வலைத்தளத்தில் மகாதீர் எழுதியுள்ளார்.

ரிசா அசிஸ்

248 மில்லியன் அமெரிக்க டாலர் கையாடல், கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் ரிசா அசிஸ் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருந்தார்.

சம்பந்தப்பட்ட பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ரிசா திரும்பச் செலுத்துவார் என்று அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம், ஊழல் தடுப்பு ஆணையம், இணைந்து செய்து கொண்ட உடன்பாடு தெரிவிக்கிறது.

அந்தப் பணம் சுமார் 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் எதிர் கட்சித் தலைவர்களிடமிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

தனக்கும் ரிசா அசிசின் விடுதலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பிரதமர் மொகிதின் யாசினும் அறிக்கை ஒன்றின் வழி கூறியிருக்கிறார். இதையும் மகாதீர் ஏற்கனவே கிண்டலடித்திருக்கிறார்.

“ரிசா அசிஸ் விவகாரத்தில் மொகிதின் யாசின் தலையிட்டார் என யாருமே கூறவில்லையே! பின் ஏன் அவராகவே தனக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமில்லை என அறிக்கை விடுகிறார்” என்றும் மகாதீர் முன்பு கூறியிருந்தார்.

ரிசா அசிஸ் திரும்பத் தரப் போவதாகக் கூறியிருக்கும் பணம் ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் என்பதையும் மகாதீர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ரிசா தான் திருடிய பணத்தில் பாதியை வைத்துக் கொண்டும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலையும் ஆகி இருக்கிறார் என்றும் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.