கோலாலம்பூர்: அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச விலைக்கு மேல் முகக்கவசங்களை விற்பனை செய்ததாகக் கூறி ஒரு தனியார் மருத்துவமனைக்கு 200,000 அபராதத் தொகையை உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் விதித்துள்ளது.
2011- ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டப் பிரிவு 11- ஐ மீறியதாக தனியார் மருத்துவமனை குற்றம் செய்துள்ளதாக முகநூல் பக்கத்தில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“நோயாளி தனது குழந்தையை பராமரிக்கும் போது செவிலியர் பயன்படுத்திய 18 முகக்கவசங்களுக்காக 201.60 ரிங்கிட் வசூலிக்கப்பட்டது.”
“அப்படியென்றால் ஒரு முகக்கவசம் 11.20 ரிங்கிட்டுக்கு சமம். அதே நேரத்தில் அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச விலை 1.50 ரிங்கிட் மட்டுமே” என்று அமைச்சு கூறியது.
அந்த அறிக்கையின்படி, மே 13-ஆம் தேதி வந்த புகாரின்படி, அமைச்சக அமலாக்க அதிகாரிகள் குழு மருத்துவமனையை விசாரித்து அதன் நிர்வாகத்தை விசாரித்து வருகிறது.
“விசாரணை நோக்கங்களுக்காக மருத்துவமனையில் இருந்து முகக்கவசங்கள் உட்பட பல ஆவணங்களையும் அக்குழு பறிமுதல் செய்தது” என்று அது தெரிவித்துள்ளது.
அபராதம் செலுத்தப்படாவிட்டால், மருத்துவமனை நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டு, விலை கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்பு சட்டம் 2011- இன் கீழ் குற்றம் சாட்டப்படும்.