மலாக்கா- கடந்த புதன்கிழமை (மே 20) மலாக்கா ஸ்ரீ நெகிரியில் உள்ள மலாக்கா முதல்வர் டத்தோ சுலைமான் அலியின் அலுவலகத்தில் அவருடன் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இந்திய சமூகம் தொடர்பான பணிகளில் மேம்பாடுகள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலாக்காவில் புதிதாகப் பதவியேற்றிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் இந்தியர்கள் யாரும் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக பதவியேற்கவில்லை. அந்தக் கூட்டணியில் இந்திய சட்டமன்ற உறுப்பினர்களும் யாருமில்லை.
மலாக்காவின் புதிய முதலமைச்சராக சுலைமான் அலி தற்போது பதவியேற்றுள்ளார்.
“மலாக்கா வாழ் இந்தியர்களின் தேவைகளையும் விடுபட்டிருந்த பணிகளையும் பூர்த்தி செய்வதற்கு மாநில முதல்வர் சுலைமான் அலி இணக்கம் தெரிவித்துள்ளார். அவரது சிறந்த தலைமைத்துவப் பண்புகள், சமுதாய நலன் ஆகியவை மூலம் அவர் சிறந்த முதலமைச்சராக செயல்படுவார் எனக் கருதுகிறேன்” என விக்னேஸ்வரன் மலாக்கா முதல்வருடனான தனது சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.
முதலமைச்சருடனான தனது சந்திப்பின்போது மலாக்கா வாழ் இந்தியர்கள் நலன் சார்ந்த பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மலாக்காவில் நீண்ட காலமாக தமிழர்கள் எதிர் நோக்கி வரும் கருமக்கிரியைகள் செய்வதற்கான இடத்திற்கான ஆவணங்கள், ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப் பள்ளி, காடேக் தமிழ்ப்பள்ளி நிலவரம், மலாக்கா நகர் பகுதியில் இந்தியர்களின் தொன்மையான வரலாறுகளையும் பண்பாட்டுக் கலைக் கலாச்சாரச் சுவடுகளைக் காட்டும் இந்தியர்களின் பொருட்காட்சியகம், லிட்டல் இந்தியா சாலையில் அமைக்கப்படவிருந்த நுழை வாயில் முகப்பு நிர்மாணிப்பு பணிகள் ஆகியவை குறித்தும் முதல்வருடன் பேசப்பட்டது.
முடக்கம் கண்டுள்ள அனைத்துப் பணிகளும் விரைவில் தொடங்குவதற்கு மாநில முதல்வர் நமக்கு பக்கப் பலமாக இருப்பார் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.
மாநிலத்தில் இந்தியர்களின் பிரதிநிதிகளாக நான்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மஇகா சார்பில் நியமிக்கப்பட்டுள்ளதற்கு அவர் முதல்வரிடம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.
மலாக்கா மாநில முதலமைச்சராக சுலைமான் அலி பொறுப்பேற்ற பிறகு மரியாதை நிமித்தமாக அவருடன் விக்னேஸ்வரன் நடத்தியிருக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
சந்திப்பின்போது முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து விக்னேஸ்வரன் கௌரவித்தார்.
இந்த சிறப்பு சந்திப்பில் மலாக்கா மாநில அம்னோ தலைவர் டத்தோ அப்துல் ரவுப் யூசோ, மாநில ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவரும் முதலமைச்சரின் இந்தியர் நலனுக்கான சிறப்பு செயலாளர் டத்தோ எம்.எஸ் மகாதேவன், மஇகா தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.