கோலாலம்பூர் – புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, அனைவரிடமும் அன்புப் பாராட்டி, ஏழை எளியவர்க்கு உணவளித்து, இறைச் சிந்தனையை மனத்தில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இறைவனைத் தொழுது, உற்சாகமாக இந்த நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துக் கொண்டார்.
“இந்த மாதத்தில் இஸ்லாமிய பெருமக்கள் தங்களுடைய மெய்வருத்தி நோன்பிருந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் மானிடர்களின் உயர்ந்த பண்புகளை தமது செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தும் வகையில், இஸ்லாமிய பெருமக்கள் பள்ளிவாசல் மற்றும் தர்க்கா போன்ற இறைவழிபாட்டுத் தலங்களில், நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்குவது என்பது ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. குறிப்பாக, ஏழை, எளியவர்கள் நாள் முழுவதும் நோன்பிருந்து, அவர்கள் நோன்பு துறக்கும் நேரத்தின்போது, நோன்புக் கஞ்சி வழங்குவது ஒரு சிறந்த கடமையாக இஸ்லாமிய பெருமக்கள் கொண்டுள்ளனர்” என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான சரவணன் கூறினார்.
“நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர், மக்கள் பல்வேறு சிரமங்களை கடந்து வாழ்கின்றனர். குறிப்பாக, மக்கள் வெகு தூரம் பயணிக்க இயலாது – பல குடும்பங்கள் ஒன்றுகூட முடியாது – பலர் ஒன்றுகூடி கொண்டாடக் கூடாது போன்ற அரசாங்க ஆணையின் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருந்தாலும்கூட, ரமலான் மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாக முப்பது நாள் நோன்பிருந்து, அவரவர் இல்லங்களிலேயே நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் சரவணன் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.