Home நாடு “அன்பு, அமைதி, சகோதரத்துவம், சமாதானம் தழைத்து ஓங்கட்டும்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

“அன்பு, அமைதி, சகோதரத்துவம், சமாதானம் தழைத்து ஓங்கட்டும்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

668
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மனித மனங்களைப் பண்படுத்தி, நற்பண்பு விதைகளை விதைத்து, பொறுமை, சகிப்புத் தன்மை ஆகியவற்றினை நற்பயிராக மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், ரமலான் மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாக முப்பது நாள் நோன்பிருந்து, நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக, நாடாளுமன்ற மேலவைத் தலைவரான  டான்ஸ்ரீ டத்தோ ச. விக்னேஸ்வரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

“இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ள கட்டாயக் கடமைகள் மற்றும் விருப்பத்துக்குரிய செயல்பாடுகள் அனைத்துமே, இறைவனுக்கும் மனிதனுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தி, தனிமனிதனுக்கும் – சமூகத்துக்கும் பயன்பெறும் விதத்திலேயே அமைந்துள்ளது என்பது போற்றத்தக்கது ஆகும். மனிதர்களின் சமூக வாழ்க்கைக்கு இருக்க வேண்டிய பண்புகளில் மென்மையும் – தன்மையும் மிகவும் அவசியமானது என்பதனை கருத்திற் கொண்டு, இந்த நோன்புப் பெருநாள், ஏழை எளியவர்களுக்கு தானம் மற்றும் தர்மங்களைச் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது” என்றும் மஇகா தேசியத் தலைவருமான விக்னேஸ்வரன் தனது செய்தியில் மேலும் தெரிவித்தார்.

பல்வேறு இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டில், அவரவர் சமயங்களைப் பின்பற்றும் சுதந்திரமான உரிமையை அரசு வழங்கியுள்ளதால், அனைத்து இனங்களுடனும் சகோதரத்துவத்துவம் –  சமாதானம் – பரிவு ஆகியவற்றுடன்  வாழ்வதுடன், இந்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நாம் அனைவரும் வித்திட்டு, உயர வேண்டுமென்று விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.