புத்ரா ஜெயா – மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை திடீரென 172 ஆக உயர்ந்திருப்பது அரசாங்க வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட் 19 பாதிப்புகள் எண்ணிக்கை 7,417 ஆக உயர்ந்தது.
கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பாதிப்புகள் இதுவாகும்.
இந்தத் தகவல்களை வெளியிட்ட சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம், புதிதாக அடையாளம் காணப்பட்ட 172 பாதிப்புகளில் 5 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாவர். 167 பேர் உள்நாட்டில் தொற்று பீடிக்கப்பட்டவர்கள்.
உள்நாட்டில் பீடிக்கப்பட்ட 167 தொற்றுகளில் 159 வெளிநாட்டுக்காரர்களிடம் அடையாளம் காணப்பட்டதாகும். இதில் 112 பாதிப்புகள் மூன்று குடிநுழைவு முகாம்களில் அடையாளம் காணப்பட்டன.
எனினும் மரணங்கள் ஏதும் நிகழவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து 5,979 பேர் இதுவரையில் குணமடைந்திருக்கின்றனர்.
தற்போது நாடெங்கிலும் 1,323 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரக் கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 115 ஆக தொடர்ந்து இருந்து வருகிறது.