வாஷிங்டன்: நியூயார்க்கில் வசிக்கும் குறைந்தது 10 மலேசியர்கள் கொவிட்19 பாதிப்புக் காரணமாக இறந்துவிட்டதாக மலேசியா அசோசியேஷன் ஆப் அமெரிக்கா (எம்ஏஏ) தெரிவித்துள்ளது.
அவர்களில் இருவர் சங்கத்தின் உறுப்பினர்கள் என்று அதன் தலைவர் கிம் போங் கூறினார்.
“ஒருவர் உணவக உரிமையாளர், மற்றொருவர் சுரங்கப்பாதையில் பாதிக்கப்பட்டார். இது ஒரு பின்னடைவு, ” என்று அவர் ஒரு தொலைபேசி பேட்டியில் கூறியதாக மலேசியாவின் ஸ்டார் ஊடகம் தெரிவித்துள்ளது.
பிக் ஆப்பிள் எனப்படும் நியூயார்க்கின் ஐந்து பெருநகரங்களில் ஒன்றான புரூக்ளினில் வசிக்கும் மலேசிய தம்பதியினர் இறந்தவர்களில் அடங்குவர் என்று கிம் கூறினார்.
“கடந்த வாரம் அவர்கள் இறந்ததைப் பற்றி எங்களுக்கு ஓர் அழைப்பு வந்தது,” என்று அவர் கூறினார்.
கப்பல் மற்றும் மின்னணு வணிகத்தை நடத்தி வரும் கிம், மலேசியர்களுக்கு இறுதிச் சடங்குகளை எம்ஏஏ ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
“நியூயார்க்கில் உள்ள பிரச்சனை என்னவென்றால், தொற்றுநோயின் ஆரம்பத்தில் மிகக் குறைந்த நபர்கள் முகக்கவசங்கள் அணிந்தனர்.” என்று அவர் கூறினார்.
நியூயார்க்கில் கொவிட்19 இறப்பு எண்ணிக்கை 23,282- ஆக உள்ளது. இதுவரை 360,000 நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக அமெரிக்காவில் 102,107 பேர் மரணமுற்றுள்ளனர்.