ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் ஜூன் 10-ஆம் தேதி முதற்கொண்டு 84 இந்து ஆலயங்கள், வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுடன் வழிபாட்டுக்காகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்துக் கருத்துரைத்த பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, “இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் காட்டவேண்டாம். கவனமுடன் செயல்படுவோம்” என அறைகூவல் விடுத்துள்ளார்.
வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை. எனவே பினாங்கு மாநிலத்திலுள்ள இந்து ஆலயங்களை மீண்டும் வழிபாட்டுக்காகத் திறப்பதில் கவனமுடன் செயல்படுவோம், காரணம் நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்கு விரிவான திட்டமிடலும், கால அவகாசமும் தேவை என்றும் இராமசாமி குறிப்பிட்டார்.
தனது கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் இராமசாமி பதிவு செய்தார். அவர் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமாவார்.
“மத்திய அரசாங்கம் எந்த அடிப்படையில் 84 ஆலயங்களைத் தேர்வு செய்தது என்பது தெரியவில்லை. ஒற்றுமைத் துறை அமைச்சர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் திறப்பது குறித்து மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரை சுகாதார அமைச்சின் கட்டுப்பாடுகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம். பினாங்கு பச்சை மண்டல மாநிலமாக இருப்பதால் நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படவிருக்கிறோம்” என்றும் இராமசாமி தெரிவித்தார்.
“மலேசிய இந்து சங்கம் மட்டும் இந்த விவகாரத்தில் எப்படி முடிவெடுத்தது என்பது தெரியவில்லை. இந்து சங்கம் நாட்டின் அனைத்து இந்து மக்களையும் பிரதிநிதிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை மத்திய அரசாங்கத்தின் முடிவுகளை அப்படியே பின்பற்றப் போவதில்லை. ஜூன் 9-ஆம் தேதி என்ன நிலைமை என்பதை முதலில் பார்ப்போம். சுகாதார அமைச்சு வகுத்துள்ள கட்டுப்பாடுகளையும் நாங்கள் பின்பற்றுவோம்” என்றும் இராமசாமி மேலும் தெரிவித்தார்.