கோலாலம்பூர்: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர், மாணவர்கள் மீது சுகாதார சோதனைகளை மேற்கொள்வது, ஆசிரியர்கள் தயாராக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பரிசீலிக்கப்படும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.
கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு இணங்க கல்வி அமைச்சகம் தயாராக இருக்கிறதா என்பதை அரசாங்கமும் அறிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
“நாங்கள் கல்வி அமைச்சகத்துடன் கண்டறிய வேண்டும். அவர்கள் பள்ளிகளில் புதிய நடைமுறைக்கு இணங்க முடியுமா என்பதை சரிபார்க்க வேண்டும். கைகளை கழுவ வேண்டும், சோதிக்க வேண்டும் (வெப்பநிலை), மற்றும் உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறதா?”
“எனக்குத் தெரிந்தவரை, ஒரு வகுப்பறையில் பொதுவாக 40 பேர் இருப்பார்கள், நாம் 40 பேரை ஒன்றாக அமர அனுமதிக்க முடியாது. இப்போது, பாதி மட்டுமே அதாவது இரண்டு வகுப்புகளாக பிரிக்க வேண்டும். ஒரு வகுப்பில் 20 என்றால், தூரம் எவ்வளவு என்று எங்களுக்குத் தெரியாது.”என்று அவர் நேற்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோருடன் ஒரு காணொளி அமர்வில் பேசினார்.
ஒரு வகுப்பிற்கு மாணவர்களின் எண்ணிக்கை 15- ஆகக் குறைக்கப்பட்டால், அதற்கு பல வகுப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் காலை மற்றும் பிற்பகல் பள்ளி அமர்வுகளை நடத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
முன்னதாக, சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் கூறுகையில், கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தால், பள்ளிகள் மற்றும் பிற துறைகளைத் திறப்பதற்கு ஜூன் மாதத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே, பிலிப்பைன்ஸில், கொவிட்-19 தொற்றுக்கு ஏற்ப தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று அதன் அதிபர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.