Home Video “வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்

“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்

1160
0
SHARE
Ad

சிங்கப்பூர் – நோய் எதுவாக இருந்தாலும் வெறும் மருந்தால் மட்டும் அது குணமாகிவிடாது. மருந்து பாதி…. மனதிடம் பாதி. இதுதான் நோயைக் குணமாக்கும் என்பதுதான் காலம் காலமாக கூறப்படும் மருத்துவ நியதி.

உலகின் பலநாடுகள் பலவற்றின் மக்களும் கோவிட்-19 கொரோனா பாதிப்பால் முடங்கியிருக்கும் நிலையில், அந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் முயற்சிகள் விரைவுபடுத்தப்படுகின்றன.

இருப்பினும் ‘நோயிலிருந்து மீண்டு விடுவோம்’ என்கிற நம்பிக்கை நிறைந்த மனதிடம்தான் முக்கியமானதாக இருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்த மனோதிடத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழ் நெஞ்சங்களை மனதிடப்படுத்த சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில் ‘வல்லமை தாராயோ’ எனும் தலைப்பில் மனத்துணிவு ஏற்படும் வகையில் தினம் ஒருவர் பேசிவருகிறார். இன்றுவரை முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பேசியிருக்கிறார்கள்.

கவிஞர் அறிவுமதி, கு.ப.ஞானசம்பந்தன், மாலன், பர்வீ சுல்தானா உள்ளிட்ட பலரும் பயனுள்ள வகையில் காணொளி வழியாகப் பேசியதை முகநூல், வாட்ஸ் அப் வழியாக மக்களுக்குக் கொண்டு சேர்த்து நம்பிக்கையூட்டுகிறது கவிஞர் இன்பாவைத் தலைவராகக் கொண்ட சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு.

தங்கம் மூர்த்தி, கவிஞர் அறிவுமதி, புலவர் சண்முக வடிவேல், கவிஞர் சினேகன், பேராசிரியர் அப்துல் காதர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, அகத்தியன் ஜான் பெனடிக், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பட்டிமன்றப் புகழ் பி.மணிகண்டன், நடிகர் தம்பி ராமையா, சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் ஃபஜிலா ஆசாத், பட்டிமன்றப் புகழ் மோகனசுந்தரம், சொற்பொழிவாளர் த.ஸ்டாலின் குணசேகரன், பத்திரிகையாளர் மாலன், முனைவர் நா.இளங்கோ, பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஐ,லியோனி, கவிதா ஜவகர், மக்களிசைக் கலைஞர்கள் செந்தில் கணேஷ் & ராஜலட்சுமி, வழக்கறிஞர் த.ராமலிங்கம், அருட்தந்தை ஜகத் கஸ்பார், சொற்பொழிவாளர் பாரதி கிருஷ்ணகுமார், திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோரின் தன்னம்பிக்கைப் பேச்சு… துவண்டுகிடக்கும் நெஞ்சங்களை நம்பிக்கைகொள்ள வைக்கிறது.

கோவிட்-19 தொற்று உலகமெலாம் பரவி, மக்கள் இனம்புரியாத இழப்பிலும் சோர்விலும் தவிக்கும் நேரத்தில், பல்வேறு வகையிலும் மனத்தளர்வை எதிர்கொள்ளும் இதயங்களுக்கு, தொலைவிலிருந்து அன்னைத் தமிழின்வழி ஓர் அன்பு அரவணைப்பையும், பாதுகாப்பு உணர்வையும், மனவலிமையும் தரும் நோக்கத்தில், ‘வல்லமை தாராயோ’  என்ற தலைப்பில் இந்த தன்னம்பிக்கையூட்டும் பேச்சுக்கள் காணொளித் தொடராக இணையத்தில் சமூக ஊடகங்களின் வழி வலம் வருகின்றன.

திரவியம் தேடி திரைகடலோடி வந்திருக்கும் மக்களின் வைராக்கியத்தை…  ஒரு நச்சுயிரி தொற்று சிதைத்துவிடாதபடி, வலிமையையும், ஆறுதலையும், தன்னம்பிக்கையையும் தருகின்றன சிங்கப்பூர் கவிமாலை மூலம் சான்றோர்கள் வழங்கும் நல்லுரைகள்.

ஓர் உதாரணமாக, பட்டிமன்றப் புகழ் பேச்சாளரும், தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை உரையாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான மோகனசுந்தரம், கவிமாலை யூடியூப் தளத்தில் ஆற்றிய சிரிப்பலைகளை எழுப்பும் உரையை கீழ்க்காணும் இணைப்பில் கண்டு, கேட்டு மகிழலாம் :