புத்ரா ஜெயா – மலேசியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில், கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று சனிக்கிழமை வரையில் இந்த எண்ணிக்கை 30 ஆக மட்டுமே இருந்தது.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட் 19 பாதிப்புகள் எண்ணிக்கை 7,819 ஆக உயர்ந்தது.
இந்தத் தகவல்களை வெளியிட்ட சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம், புதிதாக அடையாளம் காணப்பட்ட 57 பாதிப்புகளில் 10 பேர் வெளிநாட்டில் இருந்து அந்தத் தொற்றுகளால் பீடிக்கப்பட்டவர்கள் என்றும் எஞ்சிய 47 பேர் உள்நாட்டில் தொற்று பீடிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து தொற்று பீடிக்கப்பட்டவர்களில் எகிப்திலிருந்து 7 பேர், புருணையிலிருந்து ஒருவர், ஜப்பானில் இருந்து ஒருவர், சிங்கப்பூரில் இருந்து ஒருவர் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
உள்நாட்டில் பீடிக்கப்பட்ட 47 தொற்றுகளில் 43 வெளிநாட்டுக்காரர்களிடம் அடையாளம் காணப்பட்டதாகும். எஞ்சிய 4 பேர் மட்டுமே மலேசியர்களாவர்.
உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளில் பெரும்பான்மையானவை அதாவது 24 பாதிப்புகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களால் ஏற்பட்டவையாகும். இவை அனைத்தும் சிப்பாங் குடிநுழைவு முகாமில் அடையாளம் காணப்பட்டவையாகும்.
தொடர்ந்து 10-வது நாளாக மரணங்கள் ஏதும் நிகழவில்லை. மரண எண்ணிக்கை 115-ஆக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வரையில் 23 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து 6,353 பேர் இதுவரையில் குணமடைந்திருக்கின்றனர்.
தற்போது நாடெங்கிலும் 1,351 பேர் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரக் கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் மட்டுமே சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சைகள் பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து பரிசோதனைகளும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று ஒருநாளில் மட்டும் 27,459 மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மலேசியர்கள் தொடர்ந்து கவனமுடன் செயல்பட வேண்டும் என நூர் ஹிஷாம் எச்சரித்திருக்கிறார். வெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்வது, மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களைத் தவிர்ப்பது, நெருங்கி நின்று உரையாடுவதைக் குறைத்துக்கொள்வது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.