கோலாலம்பூர்: அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் அல்லது அரசாங்க நிறுவன பதவிக்கு ‘ஈர்க்கப்பட்டு’ பெர்சாத்துவில் சேர வேண்டும் என்ற பிரதமர் மொகிதின் யாசினின் குரல் பதிவு வெளிவந்ததைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் இன்று இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவான முகநூல் பக்கத்தில் இந்த குரல் பதிவு வெளியானது. இந்த குரல் பதிவு பிப்ரவரி 23 அன்று பெர்சாத்துவின் உச்சமன்றக் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக புகார் அளித்த அமானா இளைஞர் துணைத் தலைவர் ஷஸ்னி முனீர் முகமட் குரல்பதிவில் தேசிய கூட்டணி அரசாங்கம் அமைச்சர் பதவிகளையும், அரசாங்க நிறுவனப் பதவிகளையும், பதிவில் குறிப்பிட்டுள்ளபடி பிரித்துள்ளது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
“தேசிய கூட்டணி பதவிகளை விநியோகிக்கிறது” என்று அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் பரவி வந்த குரல் பதிவில், மொகிதின் அம்னோ தலைவர்களுக்கு அமைச்சரவை மற்றும் அரசாங்கப் பதவிகளை வழங்க பேசுவதாகப் பதிவு செய்யப்படுள்ளது.