வாஷிங்டன் : மின்னியாபோலீஸ் நகரில் காவல் துறையினரின் தகாத நடைமுறையால் மரணமடைந்தவர் ஜோர்ஜ் பிளாய்ட். அவரது மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.
அந்த ஆர்ப்பாட்டங்கள் சில இடங்களில் வன்செயல்களாகவும் மாறியிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து ஜோர்ஜ் பிளாய்ட் கொலைக்குக் காரணமான நான்கு காவல் துறை அதிகாரிகள் மீது இன்று கூடுதல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் இன்று புதன்கிழமை (ஜூன் 4) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஜோர்ஜ் பிளாய்ட் கழுத்தில் முழங்காலை வைத்து ஓர் அதிகாரி அழுத்த, அதன் காரணமாக மூச்சுத் திணறலால் மரணமடைந்தார்.
டெரெக் சௌவின் என்ற அந்த அதிகாரி மீது இன்று இரண்டாம் நிலை மரணம் விளைவித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் 3 அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. அந்த 3 அதிகாரிகளும் சம்பவம் நடந்த இடத்தில் அந்த நேரத்தில் இருந்தனர். அலெக்சாண்டர் குவெங், தோமஸ் லேன், டாவ் தாவ் ஆகியோரே குற்றம் சாட்டப்படும் மற்ற மூவராவார்.
இந்தப் புதிய குற்றச்சாட்டுகளின் காரணமாக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.