Home One Line P2 லங்காவி மீட்சி – தளர்வுகளைத் தொடர்ந்து 1000 விடுதி அறைகள் முன்பதிவு

லங்காவி மீட்சி – தளர்வுகளைத் தொடர்ந்து 1000 விடுதி அறைகள் முன்பதிவு

895
0
SHARE
Ad

லங்காவி – கொவிட்-19 பாதிப்புகளால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட வணிகங்களில் ஒன்று சுற்றுலாத் துறை. மலேசியாவின் சுற்றுலா மையங்களில் முதன்மை வகிக்கும் இடமாகத் திகழும் லங்காவியும் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

தங்கும் விடுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது குறைந்தது. வெளிநாட்டுப் பயணிகள் வருகை இல்லாததால் தங்கும் விடுதிகள் பெரும் இழப்பை எதிர்நோக்கின.

மலேசியாவில் மாநிலங்களுக்கிடையிலான பயணத் தடையும் அமுல்படுத்தப்பட்டதால் லங்காவி உள்நாட்டு சுற்றுப் பயணிகளின் வரவையும் இழந்தது.

#TamilSchoolmychoice

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) பிரதமர் மொகிதின் யாசின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், எதிர்வரும் ஜூன் 10 தொடங்கி மாநிலங்களுக்கிடையிலான பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து உடனடியாக லங்காவியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதி அறைகளுக்கான முன்பதிவுகள் பெறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமர் குறிப்பிட்டிருப்பதைப் போன்று ஜூன் 10-க்குப் பின்னர் மீட்சி பெறும் காலகட்டமாக நடமாட்டக் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும் என்பதற்கு அறிகுறியாக லங்காவியின் மீட்சியும் பார்க்கப்படுகிறது.

பிற்பகல் 3.00 மணி தொடங்கி சுமார் 20 நிமிடங்களுக்கு பிரதமர் வானொலி, தொலைக்காட்சி வழி உரையாற்றினார். அவரது உரை முடிந்ததும் பிற்பகல் 4.00 மணி தொடங்கி அடுத்த 45 நிமிடங்களில் சுமார் 1000 அறைகளுக்கான முன்பதிவுகள் பெறப்பட்டன. இந்தத் தகவலை லங்காவி சுற்றுலா சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி சைனுடின் காடிர் தெரிவித்தார் என ஆஸ்ட்ரோ அவானி அறிவித்தது.

இந்த முன்பதிவுகள் அனைத்தும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பெறப்பட்டதாகும்.

எதிர்வரும் ஜூன் 10 தொடங்கி, டிசம்பர் 31-க்குள்ளாக 1 மில்லியன் சுற்றுப் பயணிகளை ஈர்க்கத் தாங்கள் திட்டமிட்டிருப்பதாகவும் சைனுடின் காடிர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களின் குழந்தைகளுடன் விடுமுறையைக் கழிக்க பெற்றோர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதன் காரணமாகவே, உடனடியாக இதுபோன்ற தங்கும் விடுதி முன்பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் கருதப்படுகிறது.

மற்ற நகர்களிலும் இதுபோன்ற முன்பதிவுகள் பெறப்பட்டிருக்கலாம். எனினும் அதுகுறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.