Home One Line P1 பொதுத் தேர்தலை தேசியக் கூட்டணியின் கீழ் எதிர்கொள்வோம் – பாஸ் அறிவிப்பு

பொதுத் தேர்தலை தேசியக் கூட்டணியின் கீழ் எதிர்கொள்வோம் – பாஸ் அறிவிப்பு

573
0
SHARE
Ad

கோலாலம்பூர் : விரைவில் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் 15-வது பொதுத் தேர்தலை தேசிய முன்னணி மற்றும் பெர்சாத்து கட்சியுடன் இணைந்து எதிர்கொள்ளத் தயார் என பாஸ் அறிவித்திருக்கிறது.

ஓர் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட தயார் நிலையில் உள்ளதாக பாஸ் கட்சி இன்று அறிக்கை ஒன்றின் வழி அறிவித்தது. அதன் தலைமைச் செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் (படம்) விடுத்த அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்தார்.

இந்த மூன்று அணிகளும் தற்பொழுது தேசிய கூட்டணியின் கீழ் செயல்படுகின்றன.

#TamilSchoolmychoice

தேசியக் கூட்டணியின் கீழ் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

தேசியக் கூட்டணியைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்று கூறியுள்ள பாஸ்,  பிரதமரின் தலைமைத்துவம் மீதும் அவரது அமைச்சரவை மீதும் பாஸ் கட்சி முழு நம்பிக்கை கொண்டு இருக்கிறது என்றும் தக்கியுடின் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

தேசியக் கூட்டணி கீழ் உள்ள கட்சிகள் தொடர்ந்து ஒற்றுமையுடன் செயல்படும், தேசிய கூட்டணி அரசாங்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

பாஸ், அம்னோ இடையே கடந்த ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி கையெழுத்தான உடன்பாட்டின்படி அந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த உடன்பாடு முவாபக்காட் நேஷனல் என அழைக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து பெர்சாத்து, பாஸ், தேசிய முன்னணி மற்றும் சபா சரவாக் மாநிலத்தின் கட்சிகள் இணைந்து தேசிய கூட்டணி என்ற அமைப்பைத் தோற்றுவித்து மத்திய ஆட்சியை பிடித்தன.

தற்போது மகாதீர் மீண்டும் ஆட்சி அமைக்க தனக்குப் பெரும்பான்மை இருப்பதாக மறைமுகமாகத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் இன்னொரு ஆட்சி மாற்றத்திற்கு பதிலாக பொதுத்தேர்தலை மொகிதின் யாசின் மாமன்னர் இணக்கத்துடன் அறிவிக்கக் கூடும் என்ற ஆரூடமும் எழுந்துள்ளது.

இதற்கிடையில் தேசிய கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை அவர்களிடையே புரிந்துணர்வு இல்லை என்ற ஊடகச் செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பொதுத் தேர்தல் என்று வந்தால் அம்னோ-பாஸ் கூட்டணி ஒரு திசையிலும் பெர்சாத்து இன்னொரு திசையிலும் செல்லும், தேசியக் கூட்டணி சிதறி விடும் என்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் பாஸ் தலைமைச் செயலாளரின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.