கோலாலம்பூர்: இம்மாதம் நடக்க இருந்த இளையராஜா இசை நிகழ்ச்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி 20- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பாதிப்பின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இதன் ஏற்பாட்டாளர் மொஜொ புரோஜெக்ஸ் தெரிவித்துள்ளது.
ஆயினும் அந்நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு குறிப்பிட்ட தேதியில், முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட மலேசிய அனைத்துலக வணிக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெறும் என்று மொஜொ புரோஜெக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சிக்காக முன்னதாகவே நுழைவுச் சீட்டுகளை வாங்கியப் பொதுமக்கள் வரும் 20- ஆம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் அதனைப் பயன்படுத்தலாம் என்றும் அது கூறியது.
பாடகர்கள், இசைக் கலைஞர்கள் என 100- க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடைமுறை எடுக்கப்பட்டதாக அது தெரிவித்தது.
“இசைக்கலைஞர்கள், பாடகர்கள் உள்நாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.” என்று அது ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
இதற்கிடையே தாங்கள் வாங்கிய நுழைவுச் சீட்டுகளை மீண்டும் பெற்றுக் கொள்ள, மக்கள் தங்களிடம் முன்வைக்கும் விண்ணப்பங்களை தற்போது கவனித்து வருவதாக மொஜொ புரோஜெக்ஸ் கூறியது. ஆயினும், மீண்டும் பெற்றுக்கொள்ளப்பட்ட நுழைவுச் சீட்டுகள் அதே விலையில் விற்கப்படும் என்று உறுதி செய்யப்படாது என்றும் அது கூறியது.
நுழைவுச் சீட்டுகளை மீண்டும் பெற்றுக் கொண்ட பிறகு, குறிப்பிட்ட இருக்கைகள் பொதுமக்களுக்கு மீண்டும் விற்பனைக்கு விடப்படும் என்று அது குறிப்பிட்டது.
நுழைவுச் சீட்டுகளை பெற விரும்பும் மக்கள் support@AirasiaRedtix.com. எனும் மின்னஞ்சலுக்கு தங்கள் விண்ணப்பங்களை வைக்குமாறு அது கேட்டுக் கொண்டது.
மேலும், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 22- ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்றும் அது கூறியது.