கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி மற்றும் அதற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை இன்று நடைபெறும் சந்திப்பு கூட்டத்தின்போது தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை பிகேஆர் தலைமையகத்தில் இந்த சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இன்றைய கூட்டத்தில் தெரியவரும் என்று வட்டாரம் குறிப்பிட்டதாக மலேசியாகினி தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து நம்பிக்கைக் கூட்டணி தலைமை முடிவெடுத்துள்ளதாக வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இதே போன்ற பெரிய சந்திப்புகள் நடந்ததாகவும், பிரதமர் தேர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் வேறொரு வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்பார்த்தபடி முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அனுவார் இப்ராகிம் ஆகியோர் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்ப்படுகிறது.
ஒரு சிலர் மீண்டும் துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமராக வரவேண்டும் என்று ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது அன்வாரை கோபத்திற்கு ஆளாக்கி பல்வேறு கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளாது போனதற்கு காரணமாக அமைந்தது என்று தெரியவந்துள்ளது.
ஒருவேளை நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக சுயச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபா, சரவாக் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மகாதீரை பிரதமராக்க முடிவெடுத்தால், துன் டாக்டர் மகாதீர் நாட்டின் மூன்றாவது முறையாக பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.