Home One Line P1 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாமன்னர்-பிரதமர் நேரடி சந்திப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாமன்னர்-பிரதமர் நேரடி சந்திப்பு

808
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரதமர் மொகிதின் யாசின்  தன்னைச் சந்திக்க மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா இன்று அனுமதி வழங்கினார்.

வழக்கமாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் பிரதமர் மாமன்னரை நேரடியாகச் சந்தித்து அரசாங்க மற்றும் அமைச்சரவை விவகாரங்கள் குறித்து விளக்கம் அளிப்பது வழக்கம்.

ஆனால் கொவிட்-19 பிரச்சினைகளால் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு அமலில் இருந்த காரணத்தால் மாமன்னரும் பிரதமரும் நேருக்கு நேர் சந்திப்பது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் காணொளி வழி சந்திப்பு நடத்தி அரசாங்க விவகாரங்களை தொடர்ந்து பரிமாறிக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

இன்று புதன்கிழமை (ஜூன் 10) காலை எட்டரை மணி அளவில் அளவில் பிரதமர் மாமன்னரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் நீடித்தது என அரண்மனையின் அதிகாரபூர்வ அறிக்கை தெரிவித்தது.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீட்சிக் காலம் இன்று முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அவர்கள் இருவரும் புத்ரா ஜெயாவில் உள்ள இஸ்தானா மெலாவாத்தியில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி சந்தித்தனர். அதன் பின்னர் அவர்களின் நேரடி சந்திப்பு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

மாமன்னர்-பிரதமர் இடையிலான முந்தைய காணொளி சந்திப்பின்போது…

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி அவர்களுக்கு இடையில் காணொளி வழி சந்திப்பு நடந்தது.

அப்போது மாமன்னரும் அவரது துணைவியாரும் கொவிட்-19 தொற்று அச்சம் காரணமாக 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தனர்.

அதன்பிறகு கடந்த ஜூன் 4ஆம் தேதி காணொளியின் வழி (வீடியோ) மாமன்னரும் பிரதமரும் சந்திப்பு நடத்தினர்.

அதன்பின்னர் இன்றைக்குத்தான் முதன்முறையாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையிலான படக் காட்சிகளை இங்கே காணலாம்:

படங்கள் – நன்றி : டான்ஸ்ரீ மொகிதின் யாசின் முகநூல் பக்கம்