Home One Line P1 உறுப்பிய நீக்கத்திற்கு எதிராக மகாதீர் இடைக்காலத் தடை கோரி விண்ணப்பம்

உறுப்பிய நீக்கத்திற்கு எதிராக மகாதீர் இடைக்காலத் தடை கோரி விண்ணப்பம்

589
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் கோரி துன் மகாதீர் தரப்பினர் ஏற்கனவே வழக்கொன்றைத் தொடுத்துள்ளனர்.

அந்த வழக்கின் தொடர்ச்சியாக அந்த வழக்கு நடந்து முடியும்வரை தங்களின் உறுப்பிய நீக்கம் செல்லாது எனக் கோரும் இடைக்காலத் தடையுத்தரவுக்கு துன் மகாதீர் விண்ணப்பித்துள்ளார்.

துன் மகாதீரோடு இணைந்து மேலும் ஐந்து பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மகாதீர் தரப்பினர் செய்துள்ள இந்த இடைக்கால மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறும் என மகாதீர் தரப்பினரின் வழக்கறிஞரான ஹானிப் கத்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

மைய வழக்கு முடியும்வரை தற்போதுள்ள கட்சி உறுப்பியம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் அனைவரது நிலையும் தற்போது இருப்பது போன்றே அப்படியே நீடிக்க வேண்டும் (status quo of all parties) என்றும் தங்களின் மனுவில் கோரியுள்ளதாகவும் ஹானிப் காத்ரி (படம்) தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மகாதீரும் அவரது அணியினரும்  பெர்சாத்து கட்சியின் உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து இந்த நீதிமன்ற மைய தொடரப்பட்டுள்ளது.

அந்த மைய வழக்கு நடைபெறுவதற்கான வழக்கு நிர்வாக விசாரணை எதிர்வரும் ஜூலை 9-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மைய வழக்கில் பிரதமர் மொகிதின் யாசின், சங்கப் பதிவு இலாகாவையும் பிரதிவாதிகளாக மகாதீர் பெயர் குறிப்பிட்டுள்ளார்.

மகாதீர், முக்ரிஸ் மகாதீரோடு இணைந்து வழக்கு தொடுக்கும் மேலும் நால்வர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், டாக்டர் மஸ்லீ மாலிக், டத்தோ மர்சுகி யாஹ்யா, டத்தோ அமிருடின் ஹம்சா,  ஆகியோராவர். பெர்சாத்து கட்சியும் வாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வழக்கின் பிரதிவாதிகளாக பெர்சாத்து கட்சித் தலைவர் மொகிதின் யாசின், கட்சியின் நிர்வாக செயலாளர் முகமட் சுகைமி யாஹ்யா, தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின், சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குநர் மஸ்யாத்தி அபாங் இப்ராகிம் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

தாங்கள் இன்னும் பெர்சாத்து கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினர்கள் என்றும் தீர்ப்பு வழங்கக் கோரி மகாதீர் தரப்பினர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர். மேலும் மகாதீர் கடந்த பெர்சாத்து கட்சித் தேர்தலில் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என அறிவிக்கக் கோரியும் இந்த வழக்கின் வழி அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அதேபோன்று தான் இன்னும் கட்சியில் உறுப்பினர் என்றும் இன்னும் பெர்சாத்து  கட்சியின் துணைத்தலைவர் என்றும் எதிர்வரும் கட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதி உள்ளவர் என்றும் முக்ரிஸ் மகாதீர் வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சைட் சாதிக், தான் இன்னும் கட்சியின் உறுப்பினர் என்றும் தனது இளைஞர் பகுதி தலைவர் பதவியில் தொடர்வதாகவும் இதே வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 28 தேதியிட்ட கடிதத்தின் வழி தாங்கள் தங்களின் உறுப்பியம் செல்லாது என வழங்கப்பட்ட கடிதத்தை இரத்து செய்ய கோரியும் மகாதீர் தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த முடிவை உறுதி செய்யும் வண்ணம் ஜூன் 4-ஆம் தேதி நடந்த உச்சமன்ற கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும் அவர்கள் இந்த வழக்கின்வழி முடிவு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மைய வழக்கு நடைபெறுவதற்கு முன்னால் இடைக்காலத் தடையுத்தரவு மீதான மனு ஜூன் 18-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.