ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் டராயோ அல்வி பிகேஆர் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவர் சமந்தா சட்டமன்ற உறுப்பினரும் உறுப்பினரும் ஆவார்.
பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் அஸ்மின் அலியின் தரப்புக்கு ஆதரவாக அவர் பிகேஆர் கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்.
டராயோ அல்வி பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவின் துணைத் தலைவருமாவார்.
இன்று முதல் தனது பதவி விலகல் அமுலுக்கு வருவதாக அவர் அறிவித்திருக்கிறார். அவரது பதவி விலகல் பிகேஆர் கட்சிக்கும் அதனை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் அன்வார் இப்ராகிமுக்கும் மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இன்று ஷா ஆலம் நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தனது பதவி விலகலை அறிவித்தார்.
பிகேஆர் மகளிர் பகுதி தலைவி லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹனிசா தல்ஹா கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது தொடர்பில் தான் வருத்தம் அடைந்ததாகவும் அதனால் பதவி விலகுவதாகவும் டராயோ அல்வி கூறியிருக்கிறார்.
கட்சி தனது உண்மையான நோக்கங்களில் இருந்து விலகிவிட்டதாகவும் டராயோ அல்வி குறை கூறியிருக்கிறார்.
அவரது பதவி விலகலைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தில் பிகேஆர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பலம் 18 ஆக குறைந்திருக்கிறது. இருப்பினும் மாநிலத்தை ஆளும் பக்கத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் மிகப் பெரிய கட்சியாக இன்னும் பிகேஆர் திகழ்கின்றது.
56 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிலாங்கூர் மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி இன்னும் 42 சட்டமன்றத் தொகுதிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது.
எனவே டராயோ அல்வியின் பதவி விலகலால் மாநில அரசாங்கத்திற்கு ஆபத்து எதுவுமில்லை என்றே கருதப்படுகின்றது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் அஸ்மின் அலி 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தது
அவரது கட்சி ஆதரவாளர்களும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெர்சாத்து கட்சியில் இருப்பதாக கூறப்பட்டாலும் அவர்கள் இன்னும் அந்த கட்சியில் அதிகாரபூர்வமாக இணையவில்லை. அவர்கள் விரைவில் தங்களுக்குள் ஒரு தனிக் கட்சியைத் தொடங்குவார்கள் என்ற ஆரூடமும் கூறப்படுகிறது.