Home One Line P2 பிஎன்பி நிறுவனத் தலைவர் அப்துல் ஜலில் ரஷிட் பதவி விலகினார்

பிஎன்பி நிறுவனத் தலைவர் அப்துல் ஜலில் ரஷிட் பதவி விலகினார்

716
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிஎன்பி என சுருக்கமாக அழைக்கப்படும் பெர்பாடானான் நேஷனல் பெர்ஹாட் என்ற அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புகளில் இருந்து அப்துல் ஜலில் ரஷிட் இன்று பதவி விலகினார்.

நாட்டிலுள்ள பூமிபுத்ராக்களின் சேமிப்புகளை ஒருங்கிணைத்து அவற்றை பங்குகளாக பரிமாற்றம் செய்து அரசாங்கத்தின் சார்பில் நிர்வகிக்கும் பொறுப்பை பிஎன்பி செய்து வருகிறது.

தனது பதவி விலகல் குறித்து பிஎன்பி ஊழியர்களிடையே உரையாற்றிய அப்துல் ஜலில், தனது பதவிக் காலத்தில் கொள்கை மாறாமல் நடந்து கொண்டதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“பல வேளைகளில் சரியான முடிவுகளை எடுப்பதில் நான் சிரமங்களை எதிர்நோக்கினேன். அதன் காரணமாக திருப்தி தராத பல முடிவுகளை எடுக்க நேர்ந்தது. எனது பதவியின் மூலமாக கிடைக்கக் கூடிய வசதிகளை அனுபவிப்பதற்காக மனசாட்சியோடு போராட்டம் நடத்த விரும்பவில்லை. எனவே, சிரமமான பாதையை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இதன் மூலம் எனக்கும் குடும்பத்திற்கும் பேரிழப்புகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை” என அவர் தனது விலகல் உரையில் தெரிவித்தார்.

அவரது உரை பின்னர் மின்னஞ்சல் மூலம் பிஎன்பி ஊழியர்களுக்குப் பகிரப்பட்டது.

அண்மையக் காலத்தில் தனக்கு இடையூறு செய்யும் தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டதாகவும், பணிகளில் இடையூறுகள் செய்யும் செயல்கள் நிகழ்ந்ததாகவும் அப்துல் ஜலில் மேலும் தெரிவித்தார். தனது மின்னஞ்சல் தரவுகள் ஊடுருவப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டை வளப்படுத்தி நிர்மாணிக்கும் நோக்கில் சிங்கையிலிருந்து குடும்பத்தினரோடு வந்து பிஎன்பி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதாக அவர் கூறினார்.

எனினும் தற்போது தனது குடும்ப நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அதன்காரணமாக தனது பதவி திடீரென முடிவுக்கு வருவதாகவும் அப்துல் ஜலில் கூறினார்.

அவர் கடந்த 9 மாதமாக பிஎன்பி தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புகளை வகித்து வந்தார்.

அவரது உரைக்குப் பின்னர் அவரது பதவி விலகலை பிஎன்பி நிர்வாகமும் ஏற்றுக் கொண்டதாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அப்துல் ஜலீலுக்குப் பதிலாக புதியவர் ஒருவரை அவரது பொறுப்புகளுக்கு தேர்வு செய்திருப்பதாகவும் உரிய நேரத்தில் அதுகுறித்து அறிவிக்கப்படும் என்றும் பிஎன்பி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

பிஎன்பியைக் கைப்பற்ற முயற்சி – காடிர் ஜாசின் சாடுகிறார்

இதற்கிடையில் பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினரும் துன் மகாதீரின் முன்னாள் ஊடக ஆலோசகருமான ஏ.காடிர் ஜாசின் பிஎன்பி குறித்து சில சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

அப்துல் ஜலீலை பதவியில் இருந்து அகற்ற சில பூமிபுத்ரா வணிகர்கள் முயற்சிகள் செய்ததாகவும் அதனைச் சாதித்து, அதற்குப் பின்னர் பிஎன்பியை அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவதாகவும் காடிர் ஜாசின் குற்றம் சாட்டினார்.

பிஎன்பி நிறுவனத்தை தேசியக் கூட்டணியும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுவதாகவும் காடிர் ஜாசின் சாடியிருக்கிறார்.

மொகிதின் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தேசியக் கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து அரசாங்க சார்பு நிறுவனங்களில் அரசியல்வாதிகளையும் தங்களுக்கு சாதகமான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நியமித்து வருகிறது.