Home One Line P1 பெர்சாத்து உறுப்பினராக நீடிக்க மகாதீரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

பெர்சாத்து உறுப்பினராக நீடிக்க மகாதீரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

506
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துன் மகாதீர் உட்பட ஐவர் பெர்சாத்து கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக நீடிக்கும் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) நிராகரித்தது.

துன் மகாதீர் கட்சியின் அவைத் தலைவராகவும், உறுப்பினராகவும் தொடர்ந்து நீடிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு முடிவடையும்வரை இடைக்காலத்திற்கு பெர்சாத்து கட்சியில் தொடர்ந்து நீடிக்க அவரது தரப்பினர் செய்திருந்த விண்ணப்பத்தை நீதிபதி நிராகரித்தார்.

அவருடன் இணைந்து மேலும் 5 உறுப்பினர்களும் பெர்சாத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அந்த வழக்கு முன்பாக, தாங்கள் உறுப்பினர்களாக பெர்சாத்து கட்சியில் தொடர வேண்டும் என இடைக்கால தடை உத்தரவு ஒன்றை அவர்கள் கோரியுள்ளனர்.

அந்த இடைக்கால உத்தரவு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்பாக வழக்கு முடியும் வரையில் தங்கள் உறுப்பியம் பெர்சாத்து கட்சியில் தொடர வேண்டும் என மகாதீருடன் இணைந்து ஐவரும் செய்துகொண்டிருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

துன் மகாதீருடன், அவரது மகன் முக்ரிஸ் மகாதீர், முன்னாள் அமைச்சர்கள் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், மஸ்லீ மாலிக், முன்னாள் துணை அமைச்சர் அமிருடின் ஹம்சா, மார்சுகி யாஹ்யா ஆகியோர் அந்த வழக்கு மனுவில் தங்களை வாதிகளாகக் குறிப்பிட்டிருந்தனர்.

தங்களை பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என அவர்கள், பெர்சாத்து கட்சிக்கும், தலைவர் மொகிதின் யாசினுக்கும் எதிராக வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர்.

முன்னதாக, மைய வழக்கு முடியும்வரை தற்போதுள்ள கட்சி உறுப்பியம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் அனைவரது நிலையும் தற்போது இருப்பது போன்றே அப்படியே நீடிக்க வேண்டும் (status quo of all parties) என்றும் தங்களின் மனுவில் கோரியிருந்தனர்.

சில வாரங்களுக்கு முன்னர் மகாதீரும் அவரது அணியினரும் பெர்சாத்து கட்சியின் உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து இந்த நீதிமன்ற மைய தொடரப்பட்டது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மைய வழக்கில் பிரதமர் மொகிதின் யாசின், சங்கப் பதிவு இலாகா, பெர்சாத்து கட்சி ஆகியோரை  பிரதிவாதிகளாக மகாதீர் பெயர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் பிரதிவாதிகளாக மேலும் பெர்சாத்து கட்சியின் நிர்வாக செயலாளர் முகமட் சுகைமி யாஹ்யா, தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின், சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குநர் மஸ்யாத்தி அபாங் இப்ராகிம் ஆகியோரும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.