Home One Line P1 ஆறு மாத மாற்றத்திற்கு அன்வார் எதிர்ப்பு, மகாதீருக்கு மூத்த வழிகாட்டுதல் அமைச்சர் பதவி

ஆறு மாத மாற்றத்திற்கு அன்வார் எதிர்ப்பு, மகாதீருக்கு மூத்த வழிகாட்டுதல் அமைச்சர் பதவி

616
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆறு மாதக் காலம் பிரதமராக இருந்து பின்பு பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பதவியை விட்டுக் கொடுக்கும் பரிந்துரையை ஏற்க அன்வார் மறுத்து விட்டார்.

இது நாட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் வைக்கும் முடிவு என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆறு மாதக் காலக்கெடு என்பது முக்கியமான விசயங்களைப் பேசி முடிக்க முடியாது என்றும், ஒரு நிச்சயமற்ற தன்மையைக் குறிக்கும் என்றும் அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

“சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதாரத்தில் நீங்கள் கவனம் செலுத்த முடியாதபோது ஆறு மாதங்கள் என்பது சரியான முடிவு அல்ல. ” என்று அன்வார் கூறினார்.

டாக்டர் மகாதீருடன் பணிபுரிவதற்கு ஏதேனும் வழிகள் இருக்கிறதா என்று சேனல் நியூஸ் ஆசியாவின் நேர்காணலில் கேட்ட போது, ​​அன்வார் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார்.

“ஏற்கனவே இரண்டு முறை மகாதீர் பிரதமராக இருந்துள்ளா. இந்த கட்டத்தில் மலேசியா முன்னேற வேண்டியது அவசியம். மலேசியர்கள் சிறந்த ஒன்றுக்கு தகுதியானவர்கள்.” என்று அன்வார் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

“இது தனிப்பட்ட எதிர்ப்பு அல்ல. ஆனால், புதிதாக தொடங்குவதற்கான கேள்வி, ஒரு புதிய தொடக்கம். ”என்று அவர் கூறினார்.

டாக்டர் மகாதீர் மூன்றாவது முறையாக பிரதமராக திரும்பக்கூடாது என்று அவர் வலியுறுத்திய போதிலும், அவருக்கு மூத்த அமைச்சர் அல்லது மூத்த வழிகாட்டுதல் அமைச்சர் போன்ற பதவிகளை தருவது குறித்த ஆலோசனையை ஆமோதித்தார்.

“லீ குவான் இயூ போல, சிங்கப்பூரில் நடைமுறையில் இருந்ததைப் போல மூத்த அமைச்சர் அல்லது வழிக்காட்டுதல் அமைச்சராக இருக்கலாம்.” என்று அவர் கூறினார்.

இதனிடையே, துன் டாக்டர் மகாதீர் முகமட் அடுத்த பிரதமராக இருக்க வேண்டும் என்று நம்பிக்கைக் கூட்டணி உறுப்பு கட்சிகளான ஜசெக மற்றும் அமானா தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

ஆனால், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆட்சியை ஒப்படைப்பதற்கு மகாதீருக்கு ஆறு மாதங்களுக்கு மட்டுமே இந்த பதவியில் இருக்க அனுமதிக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இது எழுத்துப்பூர்வமாக வைக்கப்படும் என்றும் அவை தெரிவித்தன.

டாக்டர் மகாதீர் அடுத்த பிரதமர் என்ற கருத்தை பிகேஆர் நிராகரித்ததை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும், இது நம்பிக்கைக் கூட்டணி ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் வெற்றியின் யதார்த்தமான விருப்பத்தை வழங்கும் என்று அவை வலியுறுத்தின.

முன்னதாக, பிகேஆரின் உயர்மட்ட தலைவர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தில், பிகேஆர், துன் டாக்டர் மகாதிர் முகமட்டை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமராகவும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை துணைப் பிரதமராகவும் பரிந்துரைக்கும் திட்டத்தை ஏகமனதாக நிராகரித்தது.

“திங்கட்கிழமை (ஜூன் 15 ) பிகேஆர் உயர்மட்ட தலைவர்களிடையே நடந்த கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இது டாக்டர் மகாதீரை முற்றிலுமாக நிராகரித்தது.

“இந்த ஒப்பந்தத்தை விட நாங்கள் எதிர்க்கட்சியாகவே இருக்க விரும்புகிறோம் என்று நான் நினைக்கிறேன்.” என்று பிகேஆரின் டத்தோஸ்ரீ அப்துல்லா சானி அப்துல் ஹமீட் கூறியிருந்தார்.