Home One Line P1 ‘என்னை பிரதமராக தேர்ந்தெடுக்காவிட்டால், பிகேஆருடன் ஒத்துழைப்பை முறிக்க தயார்!’- மகாதீர்

‘என்னை பிரதமராக தேர்ந்தெடுக்காவிட்டால், பிகேஆருடன் ஒத்துழைப்பை முறிக்க தயார்!’- மகாதீர்

705
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் பதவிக்கு தாம் தேர்ந்தெடுப்பதை பிகேஆர் கட்சி தொடர்ந்து எதிர்த்தால், பிகேஆருடனான தனது கூட்டணியை முடிவுக்கு கொண்டுவர டாக்டர் மகாதீர் முகமட் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சின் சியூ டெய்லிக்கு அளித்த பேட்டியில், நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் வேட்பாளருக்கான தடைகள் தீர்க்கப்படாவிட்டால், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் பணியாற்றுவதை நிறுத்துவதாக மகாதீர் கூறினார்.

மூன்றாவது முறையாக பிரதமராக வருவதற்கு வேறு வழியைக் கண்டுபிடிக்க இருப்பதாக மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், இரு கட்சிகளும் அவரை பிரதமராக ஆதரித்ததால், ஜசெக மற்றும் அமானாவுடன் தொடர்ந்து பணியாற்றுவதாக மகாதீர் கூறினார்.

“நான் அவருடன் இனி ஒத்துழைக்க மாட்டேன் (அன்வார்) ஏனெனில் அவர் என்னுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. பிரதமராக நான் வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். வேறு வழிகள் இருக்கலாம்.” என்று அவர் கூறினார்.

இருப்பினும், அன்வார் மற்றும் பிகேஆர் கட்சி முரணாக இருந்தால் மட்டுமே இந்த முடிவு இறுதியாக எடுக்கப்படும் என்று மகாதீரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் பிளஸ் என்ற கூட்டணியை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக மகாதீர் கூறினார்.

“நான் விலகுவேன் என்று நினைக்கிறேன் (பிரதமராக பரிந்துரைக்கப்படாவிட்டால்).” என்று அவர் கூறினார்.

அவரும் பெர்சாத்துவும் அவர்களுடன் இணைவதற்கு முன்பு நம்பிக்கைக் கூட்டணி மற்றும் அதன் முன்னாள் மக்கள் கூட்டணி எவ்வாறு அரசாங்கத்தை அமைக்கத் தவறிவிட்டார்கள் என்பது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவித்தார்.

“அவர்கள் நீண்ட காலமாக எதிர்க்கட்சியில் உள்ளனர். நான் அவர்களுடன் சேருவதற்கு முன்பு, 2008 மற்றும் 2013- ஆம் ஆண்டுகளில், அவர்கள் வெற்றி பெற முயற்சி செய்தார்கள், ஆனால் அவர்கள் தோற்றார்கள். அவர்களால் வெல்ல முடியாது. நான் அவர்களுடன் 14-வது பொதுத் தேர்தலில் சேர்ந்தேன், மலாய்க்காரர்களின் ஆதரவுடன், நாங்கள் வெற்றி பெற்றோம்.

“அவர்கள் மிகவும் தெளிவாக இருந்தனர். அவர்கள் மலாய் வாக்குகளை வெல்ல வேண்டும், நான் அவர்களுக்கு மலாய் வாக்குகளை கொண்டு வர முடியும் என்று நினைத்தேன். ஏனெனில் பெர்சாத்து மலாய்க்காரர்களின் கட்சி. மலாய்க்காரர்கள் பல இனக் கட்சியை ஆதரிக்க மாட்டார்கள்.” என்று அவர் கூறினார்.

முன்னதாக, சேனல் நியூஸ் ஆசியாவுடனான நேர்காணலின் போது, தாம் துன் மகாதீர் மீண்டும் பிரதமராக இருக்க அனுமதிக்கப்போவதில்லை என அன்வார் கூறியிருந்தார்.

துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆறு மாதக் காலம் பிரதமராக இருந்து பின்பு பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பதவியை விட்டுக் கொடுக்கும் பரிந்துரையை அவர் ஏற்கவில்லை.

இது நாட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் வைக்கும் முடிவு என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆறு மாதக் காலக்கெடு என்பது முக்கியமான விசயங்களைப் பேசி முடிக்க முடியாது என்றும், ஒரு நிச்சயமற்ற தன்மையைக் குறிக்கும் என்றும் அன்வார் கூறினார்.

“சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதாரத்தில் நீங்கள் கவனம் செலுத்த முடியாதபோது ஆறு மாதங்கள் என்பது சரியான முடிவு அல்ல. ” என்று அன்வார் கூறினார்.

டாக்டர் மகாதீருடன் பணிபுரிவதற்கு ஏதேனும் வழிகள் இருக்கிறதா என்று சேனல் நியூஸ் ஆசியாவின் நேர்காணலில் கேட்ட போது, ​​அன்வார் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார்.

“ஏற்கனவே இரண்டு முறை மகாதீர் பிரதமராக இருந்துள்ளார். இந்த கட்டத்தில் மலேசியா முன்னேற வேண்டியது அவசியம். மலேசியர்கள் சிறந்த ஒன்றுக்கு தகுதியானவர்கள்.” என்று அன்வார் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

“இது தனிப்பட்ட எதிர்ப்பு அல்ல. ஆனால், புதிதாக தொடங்குவதற்கான கேள்வி, ஒரு புதிய தொடக்கம். ”என்று அவர் கூறினார்.

டாக்டர் மகாதீர் மூன்றாவது முறையாக பிரதமராக திரும்பக்கூடாது என்று அவர் வலியுறுத்திய போதிலும், அவருக்கு மூத்த அமைச்சர் அல்லது மூத்த வழிகாட்டுதல் அமைச்சர் போன்ற பதவிகளை தருவது குறித்த ஆலோசனையை ஆமோதித்தார்.

“லீ குவான் இயூ போல, சிங்கப்பூரில் நடைமுறையில் இருந்ததைப் போல மூத்த அமைச்சர் அல்லது வழிக்காட்டுதல் அமைச்சராக மகாதீர் இருக்கலாம்.” என்று அவர் கூறினார்.

இதனிடையே, துன் டாக்டர் மகாதீர் முகமட் அடுத்த பிரதமராக இருக்க வேண்டும் என்று நம்பிக்கைக் கூட்டணி உறுப்பு கட்சிகளான ஜசெக மற்றும் அமானா தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆட்சியை ஒப்படைப்பதற்கு மகாதீருக்கு ஆறு மாதங்களுக்கு மட்டுமே இந்த பதவியில் இருக்க அனுமதிக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இது எழுத்துப்பூர்வமாக வைக்கப்படும் என்றும் அவை தெரிவித்தன.

டாக்டர் மகாதீர் அடுத்த பிரதமர் என்ற கருத்தை பிகேஆர் நிராகரித்ததை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும், இது நம்பிக்கைக் கூட்டணி ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் வெற்றியின் யதார்த்தமான விருப்பத்தை வழங்கும் என்று அவை வலியுறுத்தின.

அண்மையில் பிகேஆரின் உயர்மட்ட தலைவர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தில், பிகேஆர், துன் டாக்டர் மகாதிர் முகமட்டை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமராகவும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை துணைப் பிரதமராகவும் பரிந்துரைக்கும் திட்டத்தை பிகேஆர் ஏகமனதாக நிராகரித்தது.