கோலாலம்பூர்: மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடையே கொவிட்19 தொற்றுகள் ஏற்பட்டால் பள்ளிகளை மூட உத்தரவிடலாம் என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் டத்தோ அஸ்மி கசாலி தெரிவித்தார்.
சமூகத்தில் இந்த தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சகம் வகுத்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நடைமுறியில் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.
“ஒரு நேர்மறையான சம்பவம் இருந்தால், நாங்கள் நோயாளியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம். நெருங்கிய தொடர்பு பள்ளியிலோ அல்லது வீட்டிலோ பரிசோதிக்கப்படுவார்கள் . பள்ளியில் நடந்தால் அது தற்காலிகமாக மூடப்படும் என்று நான் நம்புகிறேன்.” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எஸ்பிஎம், எஸ்விஎம், எஸ்டிபிஎம், எஸ்டிஏஎம் மற்றும் அதற்கு சமமான அனைத்துலக தேர்வுகள் போன்ற மாணவர்களை உள்ளடக்கிய பள்ளி அமர்வுகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டன.
முன்னதாக, கொவிட்-19 பாதிப்பைத் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மார்ச் 18 அன்று அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.