கோலாலம்பூர் – மலேசிய மேலவைத் தலைவர் பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்ட மகிழ்ச்சியில் இனி ம.இ.கா பணிகளில் கவனம் செலுத்துவேன் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
“மேலவைத் தலைவர் பதவியை பிரச்சினையின்றி நிறைவு செய்து விட்டதை எண்ணி மனநிறைவு அடைகிறேன். இந்த காலகட்டத்தில் 3 பிரதமர்கள், 3 அரசாங்கம், 3 மாமன்னர்கள் ஆகியோரின் கீழ் பணியாற்றியது குறித்து பெருமை கொள்கிறேன். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் இதையெல்லாம் சாத்தியமாக்கிய இறைவனுக்கும் தலை வணங்குகிறேன்” என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“மேலவைத் தலைவர் பதவி வகித்த காலகட்டத்தில் நாடாளுமன்ற செனட்டர்கள் அனைவரும் நல்ல ஒத்துழைப்பு வழங்கியி்ருந்தனர். அதேநேரத்தில் நாடாளுமன்ற பணியாளர்கள், மேலவை பணியாளர்கள், உயர் அதிகாரிகள், அதிகாரிகள், எனது அலுவலகப் பணியாளர்கள் என்று அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியதன் விளைவாகவே என்னால் மேலவைத் தலைவர் பணியை சிறப்பாக நடத்த முடிந்தது. இந்த வேளையில் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“இதுநாள் வரையில் மேலவைப் பணியில் ஈடுபட்டிருந்தேன். இனி கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தப் போகிறேன். ம.இ.கா வழி இந்திய சமுதாய மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. இந்தப் பணிகளில் தற்போது என்னால் முழுமையாக கவனம் செலுத்த முடியும். மக்கள் நலன் கருதி தொடர்ந்து சமுதாய சேவையை மேற்கொள்ளப் போகிறேன்” என்றும் கூறிய விக்னேஸ்வரன், இந்திய சமுதாயத்தில் சீரமைக்க வேண்டிய பல பணிகள், கடமைகள் தமக்கு இருப்பதாகவும் சொன்னார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரு செனட்டராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், 2016-ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய கூட்டணி அரசாங்கங்கள், அதன் பிரதமர்களாக இருந்த டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், துன் மகாதீர், டான்ஸ்ரீ மொகிதின் யாசின், 3 மாமன்னர்கள் ஆகியோரின் கீழ் சிறந்த முறையில் மேலவைத் தலைவராக தமது பணியை நிறைவு செய்துள்ள மனநிறைவு கொண்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.