Home One Line P2 கூகுளுக்குப் போட்டியாக மொழிமாற்ற வசதிகளை வழங்குகிறது ஆப்பிள்!

கூகுளுக்குப் போட்டியாக மொழிமாற்ற வசதிகளை வழங்குகிறது ஆப்பிள்!

684
0
SHARE
Ad

கூப்பர்டினோ (கலிபோர்னியா) – தற்போது கூகுள் தளங்களில் இருக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்ன்று ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ என்ற மொழிமாற்ற வசதியாகும்.

இதற்குப் போட்டியாக ஆப்பிள் கருவிகளிலும் இந்த மொழிமாற்ற வசதி இணைக்கப்படுகிறது என ஆப்பிள் அறிவித்தது. ஆண்டுதோறும் தனது இயங்குதள மென்பொருளை மேம்படுத்தும் ஆப்பிள் இந்த ஆண்டும் ஐஓஎஸ்14 இயங்குதள மென்பொருளை பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்துகிறது.

கடந்த திங்கட்கிழமை ஜூன் 22-ஆம் தேதி ஆப்பிள், இயங்கலை வழியாக நடத்திய ஆப்பிள் மேம்பாட்டாளர்களுக்கான அனைத்துலக மாநாட்டில் ஆப்பிள் கருவிகளுக்கென உருவாக்கப்பட்ட பல்வேறு புதிய மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

ஆண்டுதோறும் அமெரிக்காவில் கூப்பர்டினோ நகரில் நடைபெறும் ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாடு இந்த முறை கொவிட்-19 பாதிப்பால் இயங்கலை வழியாக நடைபெற்றது.

ஆப்பிள் சிலிக்கோன் அறிமுகம்

தமது மெக் கணினிகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது ஆப்பிள். இதுநாள் வரையில் இண்டெல் (Intel Corp) நிறுவனம் தயாரித்தளித்த கணினிச் சில்லுகளை (சிப்ஸ்- chips) மெக் கணினிகளின் மையச் செயலாக்கத்திற்காக  பயன்படுத்தி வந்தது ஆப்பிள். தற்போது இண்டெல்லுடனான 15 ஆண்டுகால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சொந்த சில்லுகளை இனிப் பயன்படுத்தப் போவதாக ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாட்டின் தொடக்க உரையில் டிம் கூக் அறிவித்தார்.

ஆப்பிள் தயாரிக்கும் அதன் ஐபோன் மற்றும் ஐபேட் கருவிகளில் ஏற்கனவே அந்நிறுவனம் அவற்றிற்காகவே தயாரிக்கும் சில்லுகள் பொருத்தப்படுகின்றன. தற்போது ஆப்பிள் கணினிகளுக்கும் இது நீடிக்கப்படுகிறது.

“ஆப்பிள் சிலிக்கோன்” எனப்படும் இந்த மாற்றத்தினால் மற்றொரு மாபெரும் பயனும் விளையவிருக்கிறது. இதுநாள் வரையில் ஐபோன், ஐபேட் கருவிகளில் இயங்குவதற்காக மூன்றாம் தரப்பு மேம்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்ட குறுஞ்செயலிகள் (apps) இனி மெக் கணினிகளிலும் இயங்கும். தற்போது இயக்கத்தில் இருக்கும் பெரும்பான்மையான குறுஞ்செயலிகள் எந்தவித திருத்தங்களும் இன்றி நேரடியாக மெக் கணினிகளில் இயங்கும் என்றும்  அறிவிக்கப்பட்டது.

மொழிமாற்ற வசதிகள்

ஐஓஎஸ் 14 மென்பொருளில் இடம் பெறவிருக்கும் புதிய மொழிமாற்ற அம்சங்கள் எதிர்வரும் செப்டம்பரில் அறிமுகம் காணும் என எதிர்பார்க்கப்படும் புதிய இரக ஐபோன்களில் இடம் பெற்றிருக்கும்.

முதல் கட்டமாக 11 மொழிகள் இடம் பெறுகின்றன. இதில் தமிழ் இடம் பெறவில்லை என்பது தமிழர்களுக்கு ஏமாற்றமான செய்தியாகும். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்தியும் இடம் பெறவில்லை.

அரபு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், கொரியா, மேண்டரின், போர்ச்சுகல், இரஷியா, ஸ்பெயின் ஆகிய மொழிகளே முதல்கட்டமாக அறிமுகம் காணும் 11 மொழிகளாகும்.

“டிரான்ஸ்லேட்” என்ற பெயரைக் கொண்டுள்ளது ஆப்பிளின் புதிய வசதி. மேற்குறிப்பிட்ட மொழிகளில் எழுத்து வடிவிலான படிவங்களையும், குரல்வழி பதிவாகும் செய்திகளையும் மொழிமாற்றம் செய்து கொள்ள முடியும். இணையத் தொடர்பு இல்லாவிட்டாலும் (Off line) இந்த வசதிகளை ஆப்பிள் கருவிகளில் பயன்படுத்த முடியும்.

எளிமையான முறையிலும், மிகுந்த ஆற்றலைக் கொண்டதாகவும் புதிய மொழிமாற்ற வசதிகள் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

தற்போது கூகுள் டிரான்ஸ்லேட் என்ற மொழிமாற்ற வசதிதான் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பிரபலமாகவும் விளங்குகிறது.

இனி ஆப்பிளும் கூகுளுக்குப் போட்டியாக இந்தத் துறையில் மோதவிருக்கிறது.

கூகுள் ஏற்கனவே, தமிழ் மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிமாற்ற வசதிகளை வழங்கி வருகிறது.

ஆப்பிள் தற்போது முதல் கட்டமாக 11 மொழிகளுக்கு மட்டுமே மொழிமாற்ற வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.