புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 புதிய கொவிட்19 பாதிப்புகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை விரைவாகக் குறைந்து வருவதையும், நிலைமை கட்டுக்குள் இருப்பதையும் இது எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,606-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 6 பாதிப்புகளில், 5 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள். உள்ளூரிலேயே ஒருவர் மட்டுமே தொற்றுக் கண்டுள்ளார்.
இன்று 23 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,294-ஆக உயர்ந்தது.
நாட்டில் மொத்தம் 191 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சுவாசக் கருவிகளின் உதவியோடு யாருக்கும் சிகிச்சை வழங்கப்படவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பில் யாரும் மரணமடையவில்லை.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,959 ஆக இருந்தது. மலேசியாவின் இதுவே அதிக பட்ச எண்ணிக்கையாக அப்போது கருதப்பட்டது.
புதிய 6 சம்பவங்களில் நான்கு, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மலேசியர்களிடம் அடையாளம் காணப்பட்டவையாகும். மற்றொரு சம்பவம் பணி நிமித்தம் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டுக்காரர் சம்பந்தப்பட்டதாகும்.
மற்றொரு சம்பவம் கோலாலம்பூரில் மலேசியர் ஒருவருக்கு அவர் வேலை செய்யும் இடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்டது.