புதுடில்லி – இந்தியாவுக்கு செல்லும் – அங்கிருந்து புறப்படும் – அனைத்துலக விமானப் பயணங்களுக்கான தடையை எதிர்வரும் ஜூலை 15 வரை இந்திய அரசாங்கம் இன்று நீடித்தது.
பொது வான்போக்குவரத்து இலாகாவின் தலைமைச் செயலாளர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக சரக்கு விமானங்களுக்கான பயணத்தை இந்தத் தடை பாதிக்காது. பொது வான்போக்குவரத்து இலாகாவின் அனுமதியை முன்கூட்டியே பெற்ற விமானப் பயணங்களுக்கும் இந்தத் தடை பாதிப்பை ஏற்படுத்தாது.
மலேசியாவின் ஏர் ஆசியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் இந்தியாவுக்குப் பயணங்களைத் தொடக்க ஆர்வம் காட்டுகின்றன. மாஸ் விமான நிறுவனமும் எதிர்வரும் ஜூலை முதற்கொண்டு இந்திய நகர்களுக்கான விமானப் பயணத்தை அறிவித்தது.
எனினும் இந்திய அரசாங்கத்தின் புதிய தடையால் ஜூலை 15 வரை மலேசியர்கள் யாரும் இந்தியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் படிக்கும் சில மாணவர்கள் ஜூலை மாதத்தில் இந்தியா திரும்பி கல்வியைத் தொடரும் திட்டத்தில் இருந்தனர். அதையும் அவர்கள் இனி ஒத்தி வைக்க வேண்டும்.
இருப்பினும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சில அனைத்துலக விமானப் பயணங்களுக்கு அவற்றை தனித் தனியே ஆராய்ந்து பொது வான் போக்குவரத்து இலாகா அனுமதி வழங்கக் கூடும் என்றும் அந்த இலாகாவின் அறிக்கை தெரிவித்தது.