நியூ டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 500,000 பேரைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 17,000-க்கும் அதிகமானோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 5,000- க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதே போல் மேற்கு வங்கம், மற்றும் தமிழகத்திலும் ஒரே நாளில் அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை 15,301 நபர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 407 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 15 பேர் தனியார் மற்றும் 31 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். கொவிட்-19 பாதிப்புக்கு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 957- ஆக உயர்ந்துள்ளது.