Home One Line P1 ‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”

‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”

688
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ பட்டம் கொண்ட இந்தியத் தொழிலதிபர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட நபர் டத்தோ பட்டம் பெற்றவர் என்றும், 2013 பொதுத் தேர்தலில் சிலாங்கூர் சட்டமன்றம் ஒன்றுக்குப் போட்டியிட்டவர் என்றும் மலேசியாகினி செய்தி வெளியிட்டது.

அந்த இந்தியத் தொழிலதிபர் 55 வயதான டத்தோஸ்ரீ ஆறுமுகம் (படம்) என அடையாளம் காணப்பட்டார். அவரது கொலை தொடர்பில் இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ஒருவர் வங்காளதேசி எனவும் காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட எழுவரில் கடத்தல்-கொலை தொடர்பில் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட டத்தோ அந்தஸ்து கொண்ட நபரும் ஒருவராவார். இவர் 2013 பொதுத் தேர்தலில் சிலாங்கூர் சட்டமன்றம் ஒன்றுக்குப் போட்டியிட்டவர். அரசியலிலும் சம்பந்தப்பட்டவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

தற்போது தடுப்புக் காவலில் இருக்கும் அந்த நபர் ஒரு பெரும் தொகையை டத்தோஸ்ரீ ஆறுமுகத்தின் நில மேம்பாட்டுத் திட்டம் ஒன்றில் முதலீடு செய்திருந்தார். அந்தத் திட்டம் தொடரப்படவில்லை. அதில் ஏற்பட்ட இழப்பீடு காரணமாகவே இரு தரப்புக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டதாக மலேசியாகினி செய்தி தெரிவித்தது.

இதற்கிடையில் ஹரியான் மெட்ரோ ஊடகச் செய்தியின்படி ஆறுமுகத்தைக் கடத்தும் செயலில் வழக்கறிஞர் எனக் கருதப்படும் நபர் ஒருவரும் இணைந்து ஈடுபட்டார் எனத் தெரிகிறது. காவல்துறையினர் எனத் தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட இருவர் ஆறுமுகத்தைக் கடத்திச் சென்று ஒரு வாகனத்தில் கொண்டு சென்றனர் என்றும் அந்த செய்தி தெரிவித்தது.

கடந்த ஜூன் 10-ஆம் தேதியன்று காலை 10.30 மணியளவில் ஜாலான் பெர்சியாரான் பெர்டானா, பண்டார் ஸ்ரீ டாமான்சாரா என்ற இடத்தில்  விளையாட்டு மைதானம் ஒன்றில் மெது ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் கடத்தப்பட்டார்.

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர் ரவாங்கில் வைக்கப்பட்டிருந்தார்

நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் ரவாங்கிலுள்ள பெஸ்தாரி ஜெயாவின் பத்து 27 ஜாலான் ரவாங்கில் ஒரு புதரில் ஆறுமுகத்தின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ பாட்சில் அகமட் இந்த விவரங்களை வெளியிட்டார். ஆறுமுகம் பிணைப் பணத்திற்காகக் கடத்தப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். கடந்த வெள்ளிக்கிழமையும் (ஜூன் 26) நேற்று சனிக்கிழமையும் அவர்கள் சிலாங்கூர் மாநில வட்டாரங்களில் கைது செய்யப்பட்டனர்.

கடப்பட்ட பின்னர் ஆறுமுகம் குடும்பத்தைத் தொடர்பு கொண்ட சந்தேக நபர்கள் 50 மில்லியன் சிங்கப்பூர் டாலர் பிணைப் பணத்தை அவரது குடும்பத்தினரிடம் இருந்து கோரினர்.

எனினும் அந்தப் பிணைப் பணத்தை குடும்பத்தினர் வழங்கவில்லை.

கடத்தப்பட்ட பின்னர் ஆறுமுகம் வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் ஒரு தரைவீட்டைப் பரிசோதித்த பின்னர் டத்தோ பாட்சில் அகமட் பத்திரிகையாளர்களிடம் இந்த விவரங்களைத் தெரிவித்தார். ரவாங், தாமான் கோசாசோ என்ற இடத்தில் அந்த வீடு அமைந்திருக்கிறது.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்களை காவல் துறையின் அந்த இல்லத்தைப் பரிசோதிக்கும்போது உடன் அழைத்து வந்திருந்தனர். சந்தேக நபர்களில் ஒருவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே ஆறுமுகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது என்றும் டத்தோ பாட்சில் அகமட் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட பின்னர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களிலேயே ஆறுமுகம் மரணமடைந்ததாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் காவல் துறை விசாரணையில் தெரிவித்திருக்கின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட ஆறுமுகத்தின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. சுங்கை பூலோ மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அந்த சடலம் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட நபர் ஆறுமுகத்திற்கு ஏற்கனவே அறிமுகமானவர் எனவும் பாட்சில் அகமட் குறிப்பிட்டார்.

“கொல்லப்பட்டவர் கடத்தப்பட்டதற்கான நோக்கமும், அவரது மரணத்திற்கான காரணமும் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கடத்தப்பட்ட ஆறுமுகம் வைக்கப்பட்டிருந்த இல்லத்தைச் சுற்றித் தங்கியிருக்கும் அண்டை வீட்டார் இத்தகைய சம்பவம் குறித்து ஆச்சரியம் தெரிவித்தார்கள் என ஸ்டார் இணைய ஊடகம் தெரிவித்தது. திடீரென காவல் துறையினர் நிறைய அளவில் அந்த வீட்டில் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே தாங்கள் இந்த சம்பவம் குறித்து தெரிந்து கொண்டதாக அண்டை வீட்டார் தெரிவித்ததாகவும் ஸ்டார் செய்தி குறிப்பிட்டது.

தேடப்படும் ஷேக் இஸ்மாயில் ஷேக் ஹசான்

இதற்கிடையில் இந்தக் கொலை தொடர்பில் ஷேக் இஸ்மாயில் ஷேக் ஹசான் என்ற நபர் தேடப்படுவதாக சிலாங்கூர் காவல் துறை இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.