கோலாலம்பூர் – “முக்ரிஸ் மகாதீரை இரண்டாவது துணைப் பிரதமராக நான் முன்மொழியவில்லை. மாறாக, அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்தான் அந்தப் பரிந்துரை காணப்பட்டது” என துன் மகாதீர் விளக்கமளித்தார்.
இன்று தனது வலைப் பதிவில் அவர் பதிவேற்றிய கட்டுரையில் இதனைத் தெரிவித்தார்.
முக்ரிசை துணைப் பிரதமராக முன்மொழியப்படும் பரிந்துரைக்கு பலத்த கண்டனங்கள் எழும் என்பது ஏற்கனவே தான் எதிர்பார்த்ததுதான் என்றும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான மகாதீர் தெரிவித்தார்.
கடந்த மே 30-ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அன்வாரைப் பிரதமராகவும் முக்ரிஸ் மகாதீரை துணைப் பிரதமராகவும் பரிந்துரைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டதாக குவான் எங், முகமட் சாபு இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையைத்தான் மகாதீர் மேற்கோள் காட்டி இன்றைய தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
ஷாபி அப்டாலை முன்மொழிந்த துன் மகாதீர்
இதற்கு முன்னர் ஷாபி அப்டாலைப் பிரதமராக முன்நிறுத்தி துன் மகாதீர் முன்மொழிந்த புதிய பரிந்துரை அரசியல் பார்வையாளர்களிடையேயும், சமூக ஊடகங்களிலும் பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
துணைப் பிரதமர்களாக அன்வார் இப்ராகிமையும், தனது மகன் முக்ரிஸ் மகாதீரையும் மகாதீர் முன்மொழிந்தார் என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.
அந்த செய்திகளை மறுத்துத்தான் மகாதீர் இன்றைய அறிக்கையைப் பதிவிட்டிருக்கிறார்.
அவரது புதிய பரிந்துரைக்கு அமானா, ஜசெக, வாரிசான் சபா கட்சிகளும் ஆதரித்தனர் என்பதுதான் ஆச்சரியத்தைத் தருகிறது.
14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பே மொகிதின் யாசினுடன் இணைந்து நஜிப்பின் ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் ஷாபி அப்டால். அதனால்தான் அவர் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்கிறார் மகாதீர்.
எனினும் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் துன் மகாதீருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ஷாபி அப்டால் இதுகுறித்து மேலும் சிந்தித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கப் போவதாகவும் அறிவித்தார்.
தன்னைப் பிரதமராக்கும் பரிந்துரை மிகப் பெரிய பொறுப்பு என்றும் இது குறித்து தனது மற்ற வாரிசான் தலைவர்களுடனும் சபா தலைவர்கள் சிலருடனும் கலந்தாலோசித்து அதன் பின்னரே தனது முடிவைத் தெரிவிக்க இயலும் என்றும் ஷாபி தெரிவித்திருக்கிறார்.
பிகேஆர் நிலைப்பாடு என்ன?
பிகேஆர் இன்னும் அதிகாரபூர்வமான ஒப்புதலை வழங்கவில்லை.
நம்பிக்கைக் கூட்டணியின் செயலகக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூலை 2) நடைபெறும் என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில்தான் நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் எப்போது கூடும் என்ற முடிவு எடுக்கப்படும். தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்தில்தான் மகாதீரின் பரிந்துரை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்திருக்கிறார்.
மொகிதினை மகாதீர் வீழ்த்த முடியுமா?
கடந்த காலங்களில் பிரதமராக இருப்பவர்களை நோக்கி போராட்டம் நடத்தி அவர்களை வீழ்த்திக் காட்டிய மகாதீர் இப்போது மொகிதின் யாசினை வீழ்த்தும் முயற்சியைக் கையிலெடுத்திருக்கிறார்.
ஆனால் இந்த முறை மகாதீரின் நகர்வு வெற்றியைக் கொடுக்குமா என்பது இரண்டு அம்சங்களைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும்.
முதலாவது, சரவாக் ஜிபிஎஸ் எனப்படும் காபுங்கான் பார்ட்டி சரவாக் கட்சிகள் இந்தப் பரிந்துரையை ஆதரிக்குமா என்பது!
இரண்டாவது, பிகேஆர் கட்சி ஒத்துழைக்குமா? ஏற்றுக் கொள்ளுமா? என்பது!
சரவாக் ஜிபிஎஸ் கட்சிகளும் சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரியும் தொடர்ந்து மொகிதின் யாசினுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
நடப்பு நாடாளுமன்ற சூழ்நிலையில் மொகிதின் யாசினின் ஆட்சியைத் தாங்கிப் பிடித்திருப்பது சரவாக் மாநிலத்தின் ஆதரவுதான் என்பது தெளிவு.
மொகிதினுக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. இதில் சரவாக் ஜிபிஎஸ் மட்டும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது.
எனவே, ஷாபி அப்டாலின் பிரதமர் தேர்வுக்கு நம்பிக்கைக் கூட்டணி முழு ஆதரவு கொடுத்தாலும் சரவாக் ஜிபிஎஸ் கூட்டணியின் ஆதரவு இல்லாமல் அவர் பிரதமராக முடியாது
அன்வார் ஆதரிப்பாரா?
ஷாபி அப்டால் பிரதமராக அன்வார் இப்ராகிமின் ஆதரவு அவசியமாகும். பிகேஆர் கட்சியின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களின்றி மகாதீரின் “ஷாபி அப்டால் கனவு” நிறைவேற வாய்ப்பில்லை.
மகாதீருக்குப் பிறகு நான்தான் என இதுநாள்வரை கூறி வந்த அன்வார் இனி தரம் தாழ்ந்து ஷாபியைப் பிரதமராக ஏற்றுக் கொள்ள முன்வருவாரா என்பது சந்தேகம்தான்.
அப்படியே ஷாபியை ஏற்றுக்கொண்டாலும், தன்னை விட பன்மடங்கு இளையவரான முக்ரிஸ் மகாதீருக்கு சரி சமமாக துணைப் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுத் தன்னைக் கேவலப்படுத்திக் கொள்வாரா?
அப்படிச் செய்யமாட்டார் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
15-வது பொதுத் தேர்தலை நம்பிக்கைக் கூட்டணிக்குத் தலைமையேற்று சந்தித்து, வெற்றி பெற்று பிரதமராவதையே அவர் விரும்புவார் என்பதை அவர் கடந்த சில நாட்களாக வெளியிட்டு வரும் உரைகளும் அறிக்கைகளும் தெரிவிக்கின்றன.
அப்படியே அந்தப் வீரப் போராட்டத்தில் தோல்வியடைந்தாலும் அந்த ஜனநாயக முடிவுக்கு மதிப்பளித்து ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் அன்வார் இருக்கிறார்.
எனவே, மகாதீரையே பிரதமராக ஏற்றுக் கொள்ளாத அன்வார், ஷாபியையும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவரது ஆதரவு இல்லாமல் ஷாபியை பிரதமராக்கும் மகாதீரின் கனவும் நிறைவேறாது.