சென்னை – தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் ஜீவா. மாபெரும் வெற்றிப் படங்களைத் தந்தவர் அல்ல என்றாலும், பல படங்களில் கலகலப்பான, நகைச்சுவை கலந்த கதாநாயக நடிப்பில் தமிழ் இரசிகர்களைக் கவர்ந்தவர்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் “சீறு”. படமும் சுமாரான வெற்றியைப் பெற்றது. மற்றொரு படமாக “ஜிப்சி” வித்தியாசமாக இருந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது இந்திப் படம் ஒன்றில் நடித்து வருகிறார் ஜீவா. படத்தின் பெயர் “83”.
என்ன அது “83” எனப் பலர் கேட்கலாம். ஆனால் இந்தியக் கிரிக்கெட் இரசிகர்களுக்கோ அது மறக்க முடியாத ஓர் ஆண்டு. ஆம்! அந்த ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில்தான் இந்தியக் கிரிக்கெட் குழு வெற்றி பெற்று உலகக் கோப்பையை இந்தியாவுக்கு சுமந்து வந்தது.
அந்த வெற்றிப் பயணத்தை விளக்கும் திரைப்படமாக உருவாகி வருகிறது “83”. அந்தப் படத்தில் இந்தியக் கிரிக்கெட் குழுவுக்கு தலைமையேற்ற கபில்தேவ் பாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.
1983 இந்தியக் கிரிக்கெட் குழுவில் இடம் பெற்ற தமிழ் நாட்டுக்காரர் கே.ஸ்ரீகாந்த். அவரது கதாபாத்திரத்தில்தான் நடிகர் ஜீவா நடித்திருக்கிறார்.
இதன் மூலம் இந்திப் படவுலகிலும் காலடி எடுத்து வைக்கிறார் ஜீவா.
1983-இல் கபில்தேவ் தலைமையில் இந்தியக் கிரிக்கெட் குழு பெற்ற வெற்றி பல்லாண்டு காலம் தொடர்ந்து கிரிக்கெட் இரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு அடுத்து வந்த பல உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தோல்வியையே தழுவியது.
2011-ஆம் ஆண்டில்தான் மகேந்திர சிங் டோனி தலைமையில் மீண்டும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
83 திரைப்படம் ஓடிடி எனப்படும் கட்டண இணையத் தளத்தில் வெளிவரும் என்ற தகவல்கள் உலவி வந்த நேரத்தில் அதை மறுத்திருக்கிறது படத்தயாரிப்புக் குழு.
திரையரங்குகளில்தான் வெளியிடுவோம் என உறுதியளித்திருக்கும் “83” படக் குழு அந்தப் படம் எதிர்வரும் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்தது.
இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகிறது “83”.