வாஷிங்டன் – அமெரிக்காவின் புகழ் பெற்ற தொலைக்காட்சி மற்றும் விளம்பர அழகியான கிம் கர்டாஷியன் நடத்திவரும் அழகு சாதனங்களுக்கான நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் கூடுதல் வருமானத்திற்காகவும், தங்களின் பிரபல்யத்தைப் பிரதிபலிக்கும் வண்ணமும் பல தொழில்களில் ஈடுபடுவது வழக்கம்.
கர்டாஷியன் குடும்பத்தினர் அனைவருமே தொலைக்காட்சி நட்சத்திரங்கள். புகழின் உச்சத்தைத் தொட்டவர்கள். கோடிக்கணக்கில் விளம்பர அழகிகளாக வருமானம் ஈட்டுபவர்கள்.
“கிப்பிங் அப் வித் தெ கர்டாஷியன்ஸ்” என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் தங்களின் குடும்பத்தில் நடக்கும் அந்தரங்க சம்பவங்களைப் படமாக்கி உலகமெங்கும் கோடிக்கணக்கான இரசிகர்களை ஈர்த்தவர்கள் கர்டாஷியன்ஸ் குடும்பத்தினர்.
இந்தக் குடும்பத்தின் மைய நாயகி கிம் கர்டாஷியன். பல காதலர்கள், கணவர்கள், குழந்தைகள் என்றாலும் இன்னும் கவர்ச்சியிலும் அழகிலும் கலக்கி வருபவர். இவரது தற்போதைய கணவர் கேன்யே வெஸ்ட். கறுப்பினப் பாடகர்.
விளம்பரத் தொழிலோடு தனது பெயரில் அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் கிம் கர்டாஷியன். தனது கணவர் பெயரோடு இணைத்து கிம் கர்டாஷியன் வெஸ்ட் என்ற பெயரின் சுருக்கமாக கேகேடபிள்யூ (KKW) எனத் தனது நிறுவனத்திற்குப் பெயர் சூட்டியிருக்கிறார் கிம் கர்டாஷியன்.
அந்த நிறுவனத்தில் 20 விழுக்காடு பங்குகளை வாங்கியிருக்கிறது கோட்டி (Coty Inc) என்ற நிறுவனம். இதற்கான அறிவிப்பை கடந்த திங்கட்கிழமை (ஜூன் 29) அறிவித்தது கோட்டி.
1904-ஆம் ஆண்டு முதல் பல்வேறு அழகு சாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், உடல் சரும பராமரிப்பு மருத்துவத் தைலங்கள் என பல்வேறு பொருட்களை தயாரித்தும் விநியோகித்தும் வரும் நிறுவனம் கோட்டி. 2018 கணக்கெடுப்பின்படி உலகளவில் 77 வணிக முத்திரை கொண்ட பொருட்களை விநியோகித்து வருகிறது கோட்டி.
கிம் கர்டாஷியனின் நிறுவனத்தில் 20 விழுக்காடு பங்குகளை வாங்க கோட்டி செலுத்தியிருக்கும் தொகை 200 மில்லியன் டாலர்களாகும். இதை வைத்து மதிப்பிடும்போது கிம் கர்டாஷியனின் நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலராகும்.
தங்கை கெய்லி ஜென்னர் நிறுவனத்தின் மதிப்பும் 1 பில்லியன் டாலருக்கும் மேல்…
இதே கோட்டி நிறுவனம் கிம் கர்டாஷியனின் தங்கை கெய்லி ஜென்னரின் அழகு சாதனப் பொருட்களுக்கான நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை கடந்த ஜனவரியில் விலைக்கு வாங்கியது.
கிம் கர்டாஷியனின் தங்கை கெய்லி ஜென்னரும் தனது அழகாலும் கவர்ச்சியாலும் பிரபலமானவர். 22 வயதே ஆனவர். விளம்பர அழகியாக இயங்கி வந்த அதே வேளையில் கெய்லி கோஸ்மெட்டிக்ஸ் என்ற நிறுவனத்தையும் உருவாக்கி நடத்தி வந்தார்.
கோட்டி நிறுவனம் ஜென்னரின் நிறுவனத்தில் 51 விழுக்காடு பெரும்பான்மை பங்குகளை வாங்குவதற்கு கடந்த ஜனவரியில் 600 மில்லியன் டாலர் முதலீட்டை செலுத்தியது. இதை வைத்துப் பார்க்கும்போது ஜென்னரின் நிறுவனத்தின் மதிப்பு 1.2 பில்லியன் டாலர் என கணக்கிடப்படுகிறது. எஞ்சிய பங்குகளை ஜென்னரே வைத்துக் கொள்வார்.
ஆக, அழகு சாதன நிறுவனங்களை அக்காவும் தங்கையும் தனித்தனியாக தங்கள் பெயர்களில் நடத்தி ஆளுக்கு தலா ஒரு பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனத்தை உருவாக்கியிருக்கின்றனர்.
இந்தப் புதிய வணிக ஒப்பந்தங்களின் மூலம் கோட்டி நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆண்டு தொடங்கியது முதல் கோட்டியின் பங்கு விலைகள் 83 விழுக்காடு அதிகரித்துள்ளன. அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 9.1 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்படுகிறது.