Home One Line P1 மொகிதினுக்கு ஆதரவு – ஆனால் தேசியக் கூட்டணி அதிகாரபூர்வ உருவாக்கம் பெறவில்லை

மொகிதினுக்கு ஆதரவு – ஆனால் தேசியக் கூட்டணி அதிகாரபூர்வ உருவாக்கம் பெறவில்லை

882
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசியக் கூட்டணியின் உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள் இன்று புதன்கிழமை தங்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றை பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலிமைப்படுத்துவோம் என அவர்கள் உறுதி கூறினர். பிரதமராக மொகிதின் யாசின் தொடர்வதற்கும் அவர்கள் தங்களின் ஆதரவைப் புலப்படுத்தினர்.

#TamilSchoolmychoice

ஆனால் அடுத்த பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற ஆரூடங்கள் வலுத்து வரும் வேளையில், தேசியக் கூட்டணி அதிகாரபூர்வக்கூட்டணியாக உருவாக்கம் பெறுமா என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை.

அந்தக் கேள்வியை மட்டும் அனைத்து தலைவர்களும் சாமர்த்தியமாகத் தவிர்த்து விட்டனர்.

மொகிதின் யாசினும் இது குறித்து தனது கருத்து எதனையும் பதிவு செய்யவில்லை. மாறாக, இன்றைய சந்திப்புக் கூட்டத்தின் படக் காட்சிகளை மட்டும் தனது முகநூலில் பதிவிட்டார்.

அந்தக் கூட்டம் இன்று மாலை புத்ரா ஜெயாவில் நடைபெற்றது.

“அனைத்துத் தலைவர்களும் எனக்கு ஆதரவை மறுஉறுதிப்படுத்தினர். அரசியல் நிலைத்தன்மைக்காக எங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும், ஒத்துழைப்பையும் மேலும் வலிமைப்படுத்துவதற்காக எங்களுக்கிடையில் ஓர் இணக்கம் காணப்பட்டது. மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் வளப்பத்திற்காகவும் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்” என மொகிதின் தனது முகநூலில் இன்றைய சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் பதிவிட்டார்.

இதற்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முவாபாக்காட் நேஷனல் எனப்படும் அம்னோ-பாஸ் இணைந்த கூட்டணியின் தலைவர்களும் பெர்சாத்து தலைவர்களும் இணைந்து சந்தித்தனர் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

தேசியக் கூட்டணியை அதிகாரபூர்வமானதொரு கூட்டணியாக உருவாக்கவும், 15-வது பொதுத் தேர்தலைச் சந்திப்பது குறித்த வியூகங்கள் வகுக்கவும் இந்த சந்திப்புக்கூட்டம் நடத்தப்பட்டது.

எனினும் தேசியக் கூட்டணியை அதிகாரபூர்வ கூட்டணியாக அறிவித்துப் பதிவு செய்வதில் இன்னும் சிக்கல்கள் நிலவுகின்றன.

தேசியக் கூட்டணியில் தற்போது இணைந்திருக்கும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான பொதுவான தளத்தை அடையாளம் காணும் முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

சிக்கலில் பெர்சாத்து

மற்ற எல்லா கட்சிகளையும் விட பெரும் சிக்கலில் தற்போது இருப்பது பெர்சாத்துவாகும்.

எதிர்வரும் ஜூலை 13-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டம் எதிர்பார்த்தபடி சுமுகமாக நடைபெறாவிட்டால், அல்லது தேசியக் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்தால், நாடு 15-வது பொதுத்தேர்தலை நோக்கி நகர்ந்தாக வேண்டும்.

தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் அம்னோ, மசீச, மஇகா இணைந்த தேசிய முன்னணி பொதுத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறது. அச்சமில்லாமல் பொதுத் தேர்தலை எதிர்நோக்க தேசிய முன்னணி தயார் நிலையில் நிற்பதற்குக் காரணம் கடந்த சில இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி தனது சொந்த சின்னத்திலேயே மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுபவமாகும்.

அதே போல பாஸ் கட்சியும் பொதுத் தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் நிறையத் தொகுதிகளில் வென்ற அனுபவத்தை கடந்த பொதுத் தேர்தலில் கண்டது. இதனால் அதற்கும் பொதுத் தேர்தல் பயமில்லை.

அதே போலத்தான் சபா, சரவாக் கட்சிகளும்!

ஆனால், பெர்சாத்து நிலைமையோ வேறு! இதன் வேட்பாளர்கள் அனைவரும் நம்பிக்கைக் கூட்டணி சின்னத்தை முன்வைத்து கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

அதை விட முக்கியமாக, கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக நம்பிக்கைக் கூட்டணியின் சின்னம் முடக்கப்பட, எல்லாக் கட்சிகளும் தங்களின் சொந்த சின்னத்தைக் கைவிட்டு, பிகேஆர் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றன.

இன்றைய பெர்சாத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

எனவே, இந்த முறை பொதுத் தேர்தல் நடந்தால் பெர்சாத்து தனது சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும். மகாதீர்-மொகிதின் என இரண்டு அணிகளாகப் பிரிந்து நீதிமன்ற வழக்குகளால் சிக்கிச் சிதறிக்கிடக்கும் நிலையில் மொகிதின் அணிக்கே பொதுத் தேர்தலில் பெர்சாத்து சின்னம் கிடைக்குமா? அதற்கு மகாதீர் வழிவிடுவாரா? என்பது சந்தேகம்தான்!

அப்படியே பெர்சாத்து தனது சொந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், பல நடுநிலையாளர்களும், ஜனநாயக மரபைப் போற்றுபவர்களும் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள்.

காரணம், பின்கதவு வழியாக ஆட்சியைக் கைப்பற்றியது, ஜனநாயகத்திற்கு விரோதமாக நாடாளுமன்றத்தை நடத்திக் கொண்டிருப்பது, ஆகக் கடைசியாக நாடாளுமன்ற அவைத் தலைவரை நீக்க முயற்சி செய்வது என பல காரணங்களால் வாக்காளர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது என்பது உண்மை.

எனவேதான், உடனடியாக தேசியக் கூட்டணியை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்து, ஒரு சின்னத்தை உருவாக்கி, அதன் கீழ் 15-வது பொதுத் தேர்தலை சந்திக்க மொகிதின் யாசினும் பெர்சாத்து தலைவர்களும் முனைப்புடன் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், தேசியக்கூட்டணியில் ஐக்கியமாகி தங்களின் சுய அடையாளத்தையும், ஆதரவுத் தளத்தையும் இழக்க அம்னோ-தேசிய முன்னணி-பாஸ்- தயாராக இல்லை. இந்த பரிந்துரையை விரும்பவும் இல்லை.

சிக்கல்கள் நீடிக்கின்றன.

-இரா.முத்தரசன்