Home One Line P1 தொழிலதிபர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேர் கைது

தொழிலதிபர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேர் கைது

585
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தொழிலதிபர் ஒருவரைக் கடத்திக் கொலை செய்த வழக்கு தொடர்பாக இது வரையிலும் ஒரு வங்காளதேச நாட்டவர் உட்பட 11 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ பாட்சில் அகமட் தெரிவித்தார்.

கடத்தல் அல்லது கொலைக் காரணமாக இருக்கலாம் அல்லது வணிகத்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று புலனாய்வாளர்கள் கருதுவதாக பாட்சில் கூறினார்.

கடத்தல் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் முடிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

ஜூன் 10- ஆம் தேதி காலை 10.30 மணியளவில் ஜாலான் பெர்சியாரான் பெர்டானா, பண்டார் ஸ்ரீ டாமான்சாராவில் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியில் இருந்த போது பாதிக்கப்பட்டவர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 27 அன்று காலை 9 மணியளவில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆறுமுகம் என்று அடையாளம் காணப்பட்ட தொழிலதிபர், பிணைப் பணத்திற்காகக் கடத்தப்பட்டார் என்று முன்னதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடத்தப்பட்ட பின்னர் ஆறுமுகம் குடும்பத்தைத் தொடர்பு கொண்ட சந்தேக நபர்கள், 50 மில்லியன் சிங்கப்பூர் டாலர் பிணைப் பணத்தை அவரது குடும்பத்தினரிடம் இருந்து கோரினர்.

எனினும், அந்தப் பிணைப் பணத்தை குடும்பத்தினர் வழங்கவில்லை.

கடத்தப்பட்ட பின்னர் ஆறுமுகம் வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் ஒரு தரைவீட்டைப் பரிசோதித்த பின்னர் டத்தோ பாட்சில் அகமட் பத்திரிகையாளர்களிடம் இந்த விவரங்களைத் தெரிவித்திருந்தார்.

சந்தேக நபர்களில் ஒருவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே ஆறுமுகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது என்றும் டத்தோ பாட்சில் அகமட் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட பின்னர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களிலேயே ஆறுமுகம் மரணமடைந்ததாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் காவல் துறை விசாரணையில் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட நபர் ஆறுமுகத்திற்கு ஏற்கனவே அறிமுகமானவர் எனவும் பாட்சில் அகமட் குறிப்பிட்டிருந்தார்.