கோலாலம்பூர்: மலேசிய உற்பத்தித்திறன் கழகத்தின் (MPC) தலைவர் பதவியிலிருந்து கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவாவுக்கு பிகேஆர் மத்திய தலைமைக் குழு எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
ஜூன் 28-ஆம் தேதி நடந்த மத்தியக் குழுக் கூட்டம் கட்சியின் ஒழுக்காற்று குழுவின் முன்மொழிவின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதை பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலை தொடர்பு கொண்டபோது உறுதிப்படுத்தினார்.
“ஆம், தியான் சுவா கலந்து கொண்ட கடைசி கூட்டத்தில் மத்தியக் குழுவின் முடிவின்படி நான் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளேன்.” என்று சைபுடின் தெரிவித்தார்.
இன்று முன்னதாக, மலேசிய இன்சைட் இணையத்தளம், ஜூன் 29 தேதியிட்ட தியான் சுவாவிற்கு சைபுடின் எழுதிய கடிதத்தை வெளிப்படுத்திய ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த கடிதத்தின்படி, தியான் சுவா தனது அரசியல் நியமனங்களிலிருந்து விலக உத்தரவிடப்பட்டுள்ளார் அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், சின் செவ் டெய்லி தியான் சுவாவை மேற்கோள் காட்டி, அத்தகைய கடிதம் எதுவும் அவரை பதவி விலகுமாறு கேட்கவில்லை என்றும், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் இந்த நியமனம் குறித்து பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளது.