Home One Line P1 பொதுத் தேர்தலில் பிரதமராக மொகிதினுக்கு ஆதரவு, சபா அம்னோ விளக்கம் பெறும்!

பொதுத் தேர்தலில் பிரதமராக மொகிதினுக்கு ஆதரவு, சபா அம்னோ விளக்கம் பெறும்!

497
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: 15-வது பொதுத் தேரலில் மொகிதின் யாசினை பிரதமராக நியமிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்த விரிவான விளக்கத்திற்காக சபா அம்னோ, கட்சித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியை சந்திக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது .

சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த விரிவான தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“சபா அம்னோ தலைவரான எனக்கு விரிவாக தெரிவிக்கப்படவில்லை. ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மட்டுமே செய்திகளைப் பெற்றுள்ளேன்.

#TamilSchoolmychoice

“என்ன நடந்தாலும் அம்னோவுக்கு ஒரு தலைவர் இருக்கிறார். எனது தலைவர் கட்சித் தலைவர்.

“அம்னோ கட்சியின் ஒட்டுமொத்த திசையைப் பற்றி விவாதிப்பதில் கட்சித் தலைவரிடம் சபா அம்னோ நம்பிக்கைக் கொண்டுள்ளது.

“உடன்படிக்கை குறித்து விரிவான விளக்கம் கேட்க நான் எதிர்காலத்தில் தலைவரை சந்திப்பேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 15- வது பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக மொகிதின் யாசினுக்கு ஆதரவு அளிக்க அம்னோ மற்றும் பாஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்திருந்தார்.

அண்மையில், ஒரு சந்திப்புக் கூட்டத்தில் இந்த முடிவு விவாதிக்கப்பட்டதாகவும், பெர்சாத்து தலைவரான அவருக்கு இரண்டு பெரிய மலாய்-முஸ்லிம் கட்சியின் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான முவாபாக்காட் நேஷனல் தலைவர்களுடனான சந்திப்பு குழு மட்டத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தது. அங்கு மொகிதினை பிரதமராக தொடர்ந்து ஆதரிக்க நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

“வரவிருக்கும் தேர்தல்களில், இரு கட்சிகளும் பிரதமராக மொகிதினை நியமிக்க அல்லது ஆதரிக்க ஒப்புக் கொண்டுள்ளன.” என்று அவர் மேற்கோளிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ‘ஷெரட்டன் நகர்வு’ மூலம் நம்பிக்கைக் கூட்டணி வெளியேற்றப்பட்ட பின்னர் டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு பதிலாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பிரதமராக பதவி ஏற்றார்.

இதற்கிடையே, புதன்கிழமை அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை பிரதமர் புத்ராஜெயாவில் ஏற்பாடு செய்திருந்தார்.

நாடு மற்றும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து ஆட்சி நல்ல முறையில் நடைபெற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததாக அவர் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.