Home One Line P2 “கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு

“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு

994
0
SHARE
Ad

சென்னை – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.சந்திரசேகரன். தனது பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் தமிழகத்தின் இந்து ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்துள்ளார் சந்திரசேகரன்.

கிரேக்க, இலத்தீன் போன்ற மற்ற செம்மொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பாய்வு செய்யும் பணிகள் தொடங்கப்படும் என சந்திரசேகரன் தெரிவித்தார்.

செம்மொழி நிறுவனத்தின் முதல் நிரந்தர இயக்குநராக சந்திரசேகரன் (படம்) நியமிக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் காங்கேயம், முள்ளிப்புரத்தில் அமைந்திருக்கும் அரசாங்க கலை, அறிவியல் கல்லூரியின் துணைப் பேராசிரியராக அவர் பணியாற்றி வந்தார்.

“தமிழ் மொழியின் பெருமையை உலக அரங்கில் கொண்டு செல்வதற்கும் நான் முயற்சிகள் எடுப்பேன். தமிழின் செழுமையையும் ஆழத்தையும் உலக அரங்கில் விளக்குவதற்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன்” என்றும் என சந்திரசேகரன் தெரிவித்தார்.

கீழ்க்காணும் மற்ற திட்டங்களும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் :

  • பழங்காலத் தமிழ் மொழி சுவடிகளை தற்போதுள்ள மொழியில் உருமாற்றம் செய்வது;
  • உலக நாடுகளில் அதிக அளவில் தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வியைப் பரப்புவது;
  • உலகளாவிய நிலையில் முன்னணி பல்கலைக் கழகங்களில் தமிழ்மொழிக்கான ஆய்வு இருக்கைகளை உருவாக்குவது;

மேற்கண்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இந்திய மனிதவள அமைச்சுடனும் மாநில அரசாங்கத்துடனும் இணைந்து அவர்களின் ஆதரவுடன் பாடுபடப் போவதாகவும் சந்திரசேகரன் உறுதியளித்தார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மொழி மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கு கருத்தரங்கங்கள், மாநாடுகளையும், தமிழகக் கல்வி நிலையங்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் எனவும் சந்திரசேகரன் கூறினார்.

சந்திரசேகரனின் பின்னணி

2013-இல் இளம் ஆய்வாளருக்கான விருதை இந்திய அதிபரிடம் இருந்து பெறும் சந்திரசேகரன்

47 வயதான சந்திரசேகரன் கற்பித்தல், தமிழ் மொழி ஆய்வுகள் தொடர்பில் பரந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். முள்ளிப்புரம் துணைப் பேராசியராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் நாமக்கல், உதகமண்டலம் போன்ற பகுதிகளில் உள்ள அரசாங்கக் கல்லூரியில் சந்திரசேகரன் பணியாற்றியிருக்கிறார்.

சங்க காலத் தமிழ் இலக்கியங்களையும் பழந்தமிழ் படைப்புகளையும் ஆராய்ச்சி செய்த திறனையும், அனுபவத்தையும் சந்திரசேகரன் கொண்டிருக்கிறார். இந்தியக் கலாச்சார, மொழி ஆய்வுகள், பக்தி இலக்கியம், பழங்குடியினர் இலக்கியங்கள் ஆகியவை குறித்த ஆய்வுகளையும் சந்திரசேகரன் மேற்கொண்டிருக்கிறார்.

2013-ஆம் ஆண்டில் இளம் கல்வி ஆய்வாளர் விருதை அப்போதைய இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து சந்திரசேகரன் பெற்றுள்ளார்.

“கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடுகளால் நான் வீட்டில் இருந்த காலகட்டத்தில் பல நூல்களை மொழியாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். ஐரோப்பிய நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு இயங்கலை வழியான கற்பித்தல் பணிகளை மேற்கொண்டிருந்தேன். இந்த காலகட்டத்தில்தான் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டேன் என்ற இனிய, ஆச்சரியம் தரும் செய்தி என்னை வந்தடைந்தது. இதில் மகிழ்ச்சிதான் என்றாலும் எப்போதும் என்னைச் சுற்றி மாணவர்களைக் கொண்ட வாழ்க்கையை இழப்பது வருத்தமாக இருக்கிறது. கற்பிக்கும் பணியை விடுவது என்பதும் எனக்கு துயரத்தைத் தருகிறது” என்றும் சந்திரசேகரன் தனது நியமனம் குறித்து விவரித்தார்.

அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

இதற்கிடையில் சந்திரசேகரனின் நியமனம் குறித்துக் கருத்துரைத்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான நிரந்தர செயலகத்தைக் கட்டி முடிப்பது, இந்த அமைப்புக்கான நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பது போன்றவை சந்திரசேகரனின் முதல்கட்டப் பணிகளாக அமையும் என்றார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைமைச் செயலகம் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் இயக்குநர் நியமனம் தாமதமான காரணத்தால் செயலகத்தின் நிர்மாணிப்புப் பணிகள் முழுமையடைவதிலும் தாமதம் ஏற்பட்டது என பாண்டியராஜன் தெரிவித்தார்.

“தற்போது இயக்குநர் நியமனம் செய்யப்பட்டிருப்பதால் முடிவடையும் நிலையில் உள்ள தலைமைச் செயலகத்தின் பணிகள் விரைந்து முடிக்கப்படும்” என்ற பாண்டியராஜன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுகளும் தற்போது மீண்டும் தொடங்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

தமிழ் மொழியின் பழம் பெருமையை நிலைநாட்டி, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கிலும் உலக அளவில் தமிழ் மொழியைப் பரப்புவதற்கும் உருவாக்கப்பட்டிருக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008 முதல் சென்னையில் இயங்கி வருகிறது.

இந்திய மனிதவள அமைச்சின் மேற்பார்வையில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

தமிழ் மொழி அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்குமான விருதுகளையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர்/அறிஞர் ஒருவருக்கு தொல்காப்பியர் விருது வழங்கப்படும். 500,000 ரூபாய் சன்மானத்தைக் கொண்டது இந்த விருது. இந்திய அதிபரால் இந்த விருது வழங்கப்படும்.

“குறள் பீடம்” என்ற விருது இருவருக்கு வழங்கப்படும். அயல்நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்/கல்வியாளர் ஒருவருக்கும் அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியக் குடியுரிமை பெற்ற ஒருவருக்கும் இந்த விருது வழங்கப்படும். தலா 500,000 ரூபாய் சன்மானத்தைக் கொண்டது இந்த விருது.

இளம் கல்வி ஆய்வாளர் விருது ஐவருக்கு வழங்கப்படும். அவர்கள் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தலா 100,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.

இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் ஜூலை 15 ஆகும்.

கூடுதல் விவரங்களைக் கீழ்க்காணும் வலைத் தளத்தில் பெறலாம்:

https://www.cict.in/index_english.php