Home One Line P1 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநராக சந்திரசேகரன் : முரசு நெடுமாறன் வரவேற்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநராக சந்திரசேகரன் : முரசு நெடுமாறன் வரவேற்பு

989
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்திய அரசாங்கத்தின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மீண்டும் முறையாகச் செயல்படத் தொடங்கியிருப்பது குறித்தும் அதன்  இயக்குநராக பேராசிரியர் முனைவர் இரா. சந்திரசேகரன் அமர்த்தம் பெற்றிருப்பது குறித்தும் மலேசியாவின் மூத்த தமிழறிஞரும் கவிஞருமான முனைவர் முரசு நெடுமாறன் (படம்) வரவேற்பு தெரிவித்தார்.

“பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன், 2006 ஆம் ஆண்டில் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிறுவப்பெற்ற அவ்வியக்கத்திற்கு இப்பொழுதாவது நிரந்தர இயக்குநர் அமர்த்தப் பெற்றிருக்கிறார் என்பது ஆறுதல் தரும் செய்தியாகும். கடந்த பதின்மூன்று ஆண்டுகாலம், இயக்கம் அதற்குரிய தன்மையோடு இயங்கவில்லை என்பதனையே இது குறிக்கிறது. இதன் காரணமாக கவலையில் உறைந்து கிடந்த உலகத் தமிழர்க்கு இப்பொழுதாவது இயக்குநர் ஒருவரை இந்திய நடுவணரசு  அமர்த்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என ஊடக அறிக்கை ஒன்றில் முரசு நெடுமாறன் தெரிவித்தார்.

சென்னையிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வருகைதரு பேராசிரியராகவும் முரசு நெடுமாறன் முன்பு பணியாற்றியுள்ளார்.

முனைவர் இரா.சந்திரசேகரன்
#TamilSchoolmychoice

“உலகில் நெடுங்காலமாகச் செந்தமிழ் என்று வழங்கிவரும் தமிழ், உள்ளபடியே செம்மொழிதான். இருப்பினும், அதனை அதிகார முறையோடு உலகம் ஏற்றுக் கொள்ளச் செய்த இந்திய நடுவணரசுக்கு உலகத்தமிழர் நன்றி உரியது. நம்மவர்க்கு ஒன்றனைப் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் குறைவு என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். அவற்றுள் இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ்ச் செம்மொழித் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பெற்ற தொகை மிகுதி. ஆனால் அவை முறையாகப் பயன்படுத்தப் படாமல் பெருந்தொகை நடுவணரசுக்கே திரும்பிக் கொண்டிருந்தது. அதற்கு வேறு எவரையும் குறைக்கூறிப் பயனில்லை. தமிழ் சிறந்த மொழியாக இருந்தும் ஆங்கிலம் முதலிய மொழிகளில் தமிழின் சிறப்புச் சென்று பரவவில்லை. தமிழ் செம்மொழி என்னும் வகையில் அதன் உலகப் பரவலுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. செயலே எல்லா வெற்றிகளுக்கும் அடிப்படை” என்றும் முரசு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

“இயக்குநராய் அமர்த்தம் பெற்றுள்ள முனைவர் சந்திரசேகரர் ஓர் அலுவர் என்னும் அளவில் அல்லாமல், பட்டறிவுமிக்க பேராசிரியர் என்பதால், அவருக்கு மொழியைப் பரப்பும் – வளம் சேர்க்கும் திறன் மிகுதி – என்பதில் ஐயமில்லை. மேலும் அவர் உலகளாவித் தொண்டாற்றிய அனுபவம் மிக்கவர். இனித் தமிழுக்குப் பொற்காலம் பிறக்குமென உலகத் தமிழ் நெஞ்சங்கள் நம்புகின்றன”  என்றும் முரசு நெடுமாறன் மேலும் குறிப்பிட்டார்.

இரா.சந்திரசேகரன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக நியமனம்

செம்மொழி நிறுவனத்தின் முதல் நிரந்தர இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும்  ஆர்.சந்திரசேகரன். தனது பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் தமிழகத்தின் இந்து ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்துள்ளார்.

கிரேக்க, இலத்தீன் போன்ற மற்ற செம்மொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பாய்வு செய்யும் பணிகள் தொடங்கப்படும் என சந்திரசேகரன் தெரிவித்தார்.

“தமிழ் மொழியின் பெருமையை உலக அரங்கில் கொண்டு செல்வதற்கும் நான் முயற்சிகள் எடுப்பேன். தமிழின் செழுமையையும் ஆழத்தையும் உலக அரங்கில் விளக்குவதற்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன்” என்றும் என சந்திரசேகரன் தெரிவித்தார்.

கீழ்க்காணும் மற்ற திட்டங்களும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் :

  • பழங்காலத் தமிழ் மொழி சுவடிகளை தற்போதுள்ள மொழியில் உருமாற்றம் செய்வது;
  • உலக நாடுகளில் அதிக அளவில் தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வியைப் பரப்புவது;
  • உலகளாவிய நிலையில் முன்னணி பல்கலைக் கழகங்களில் தமிழ்மொழிக்கான ஆய்வு இருக்கைகளை உருவாக்குவது;

மேற்கண்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இந்திய மனிதவள அமைச்சுடனும் மாநில அரசாங்கத்துடனும் இணைந்து அவர்களின் ஆதரவுடன் பாடுபடப் போவதாகவும் சந்திரசேகரன் உறுதியளித்தார்.