புத்ராஜெயா: மார்ச் 1 முதல் அரசாங்க நிர்வாகத்தை ஏற்ற பின்னர் பிரதமர் துறை உறுப்பினர்களுடன் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை முதல் சந்திப்பை நடத்தினார்.
ஒவ்வொரு மாதமும் பெர்டானா சதுக்கத்தில் நடைபெறும் இந்த சந்திப்புக் கூட்டம், கொவிட் 19 பாதிப்பைத் தடுப்பதற்காக மார்ச் 18 முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக நடக்கிறது.
காலை 8.26 மணியளவில் தேசியக் கீதமும், ஜாலூர் கெமிலாங் பாடலும் பாடப்பட்டு, உரை நிகழ்த்தினார்.
“சில மாதங்களுக்கு முன்பு நாம் நடத்த வேண்டிய ஒரு மாதாந்திர சந்திப்பை முதன்முறையாக நடத்த முடிந்தது. ” என்று மொகிதின் தனது உரையைத் தொடங்கி அரசு ஊழியர்களுடன் உரையாற்றினார்.
கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காக தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி, இந்த சந்திப்பு நடந்தது. இதில் பிரதமர் துறை கீழ் மூன்று மூத்த நிர்வாகிகள், 56 துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய 250- க்கும் குறைவான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் துறை அமைச்சில் உள்ள ஐந்து அமைச்சர்களான, டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் (பொருளாதாரம்), டத்தோஸ்ரீ டாக்டர் மாக்சிமஸ் ஜானிட்டி ஓங்கிலி (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்), டத்தோ முகமட் ரெட்சுவான் முகமட் யூசோப் (சிறப்பு கடமைகள்), டத்தோ தக்கியுடின் ஹசான் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்), டத்தோ டாக்டர் சுல்கிப்லி முகமட் அல் பக்ரி (மத விவகாரங்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.