ஜோகூர் பாரு: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் திடீர் தேர்தலை நடத்த போதுமான திறனைக் கொண்டுள்ளது என்று அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
பொது சுகாதாரம், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டதை சுட்டிக் காட்டிய அஸ்மின் அலி, இந்த ஆண்டில் அல்லது அடுத்த ஆண்டில் தேர்தலை நடத்த முடியும் என்று கூறியுள்ளார்.
தேர்தல் நடைபெற்றால், அதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி ஒன்றுபட்டு செயல்படுவது முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க நம்பிக்கைக் கூட்டணி அரசு தவறிவிட்டதாகவும், அதனை சரிசெய்யும் நடவடிக்கைகளில் தேசிய கூட்டணி செயல்படுவதாகவும் கூறினார்.
“நாங்கள் நாட்டை சேதப்படுத்தவில்லை. அனைத்து மக்களின் நலனையும் அரசாங்கம் கவனித்துக்கொள்வதோடு, நாட்டின் செழிப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துவோம்.” என்று அவர் கூறினார்.
கொவிட்19 தொற்று நோய் பாதிப்பினால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கத்தின் அண்மைய பொருளாதார ஊக்கத் திட்டம் தொடர்ந்து நாட்டின் நிலைமை மேம்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி தரப்பில் பிரதமர் வேட்பாளர் யாரென்பதை டாக்டர் மகாதீர் முகமட் உட்பட அதன் கூட்டணிக் கட்சிகள் தவறிவிட்டதாக அஸ்மின் குறிப்பிட்டார்.
கடந்த சில வாரங்களாகவே, தேசிய கூட்டணி தரப்பில் பொதுத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும், நடத்தப்படலாம் என்றும், அது குறித்த அதன் கூட்டணிக் கட்சிகளான அம்னோ, பாஸ் ஆகிய கட்சிகள் அறிக்கைகள் வெளியிட்டு வருவது கண்கூடு.