புது டில்லி: கடந்த வாரங்களில் இந்தியாவில் பெரும்பாலான் பொருளாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் ஒரு சில தளர்வுகளுக்கு மத்தியில் செயல்படத் தொடங்கியதிலிருந்து, அந்நாட்டில் கொவிட்19 தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.
தற்போது, அனைத்துலக அளவில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, இந்தியாவில் கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கையானது 690,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி ரஷ்யாவின் ஒட்டு மொத்த கொவிட்19 தொற்று பரவல் எண்ணிக்கை என்பது 680,000-ஆக உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் 1.5 மில்லியன் சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்கா முதல் நிலையில், 2.8 மில்லியன் சம்பவங்களைக் கொண்டுள்ளது.
தற்போது, நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை அமலில் உள்ள நிலையிலும் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகரிப்பு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலர் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கும், நடைமுறைகளுக்கும் செவிமடுக்காததை பொது மக்கள் குறையாகக் கூ றிவருகின்றனர்.