கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசாங்கத்தை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடர வாரிசான் கட்சித் தலைவர் ஷாபி அப்டால் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் தொடர்ந்து கலந்துரையாட அன்வாருக்கு முழு அதிகாரமும் வழங்கப்படுவதாக நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
ஷாபியை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று இன்று அந்த மன்றம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மக்கள் ஆணையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என்றும் மன்றம் நம்புகிறது.
“இதுபோன்று, ஆணை திரும்பப் பெறுவதை ஷாபி அப்டால் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து விவாதிக்க தலைவர்கள் மன்றம் அன்வாருக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.” என்று அது மேலும் கூறியது.
இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்கிடையில், அண்மையில், ஷாபி அப்டாலைப் பிரதமராக முன்நிறுத்தி துன் மகாதீர் முன்மொழிந்த புதிய பரிந்துரை அரசியல் பார்வையாளர்களிடையேயும், சமூக ஊடகங்களிலும் பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்தது.
துணைப் பிரதமர்களாக அன்வார் இப்ராகிமையும், தனது மகன் முக்ரிஸ் மகாதீரையும் மகாதீர் முன்மொழிந்திருந்தார்.
14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பே மொகிதின் யாசினுடன் இணைந்து நஜிப்பின் ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் ஷாபி அப்டால். அதனால்தான் அவர் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று மகாதீர் கூறியிருந்தார்.
இன்றையக் கூட்டத்தில் துன் மகாதீர் முகமட் கலந்து கொள்ளவில்லை. இன்றைய நம்பிக்கைக் கூட்டணி சந்திப்புக் கூட்டத்தை அடுத்து துன் மகாதீர் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.