கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஏர் ஆசியா கோலாலம்பூர் பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்நிறுவனம் எதிர்நோக்கியிருக்கும் நிதிச் சிக்கல்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
கோலாலம்பூர் பங்குச்சந்தை பின்பற்றும் பிஎன் 17 என்ற (Practice Note 17 – PN17) நடைமுறை உத்தரவு வரையறைக்குள் ஏர் ஆசியா இடம் பெற்றிருக்கிறது என அதன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. என்றாலும் இன்னும் அத்தகைய அதிகாரபூர்வ நிலைப்பாடு பங்குச் சந்தையால் எடுக்கப்படவில்லை.
பிஎன் 17 என்பது என்ன?
முதலில் ஒரு நிறுவனம் கோலாலம்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட பல்வேறு நிபந்தனைகள் இருக்கின்றன. அவற்றை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள்தான் பங்குச்சந்தையில் நுழைந்து தங்களைப் பட்டியலிட்டுக் கொள்ள முடியும்.
பட்டியலிடப்பட்ட பின்னரும் அந்த நிறுவனங்கள் பல சட்டங்களைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். அப்படிப் பின்பற்றாவிட்டால், அல்லது அவ்வாறு பின்பற்ற முடியாத இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படுவது அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று.
பிஎன் 17 நிலைமை பின்வரும் காரணங்களுக்காக அல்லது அதில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏற்படலாம்:
- நிறுவனத்தின் மொத்த செலுத்தப்பட்ட மூலதனத்தில், பங்குதாரர்களின் பங்குகளின் மதிப்பு 25 விழுக்காட்டுக்கும் குறைவாக இருப்பது;
- (சொத்து மீதான கடன்களைச் செலுத்த முடியாத பட்சத்தில்) நிறுவனத்தின் சொத்துகளை நிர்வகிக்க நீதிமன்றமோ, கணக்காய்வு நிறுவனங்களோ வெளியிலிருந்து நியமிக்கப்படுவது;
- பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் அல்லது தொடர்புடைய நிறுவனங்கள் திவால் நிலைமைக்கு ஆளாவது;
- மோசமான நிதிப் பற்றாக்குறையை நிறுவனம் எதிர்நோக்குகிறது என அதன் வெளிக் கணக்காய்வாளர்கள் எதிர்மறை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுவது;
- நிறுவனத்தின் கடன்களை அல்லது அந்தக் கடன்களுக்கான வட்டியை உரிய நேரத்தில் நிர்வாகம் செலுத்த முடியாமல் போவது;
- நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் முடக்கப்படுவது அல்லது நிறுத்தப்படுவது;
- நிறுவனங்கள் தங்களுக்கென முறையான வணிக செயல்பாடுகள், நடவடிக்கைகள் இல்லாம் இயங்குவது;
மேற்கண்ட காரணங்களால் அந்த நிறுவனம் பிஎன்17 நிறுவனம் என வகைப்படுத்தப்படும். காலப் போக்கில் பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படும்.
ஏர் ஆசியா பிரச்சனை என்ன?
சரி! ஏர் ஆசியாவுக்கு தற்போது என்ன பிரச்சனை? இதை விரிவாக விளக்க வேண்டியதில்லை. கொவிட்-19 பாதிப்புகளால் அனைத்து விமான நிறுவனங்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டு தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன.
இந்நிலையில்தான் பிஎன் 17 நடைமுறை உத்தரவு நிலைமைக்கு தாங்கள் உட்படுத்தப்படிருப்பதாக ஏர் ஆசியா அறிக்கை ஒன்றின் வழி கோலாலம்பூர் பங்குச் சந்தை நிர்வாகத்திற்கு இன்று புதன்கிழமை (ஜூலை 8) அறிவித்திருக்கிறது.
ஆனால், அரசாங்கமும், கோலாலம்பூர் பங்குச் சந்தையும் நிறுவனங்களுக்கு அறிவித்திருக்கும் சலுகைகள், மீட்சி, நிவாரண நடவடிக்கைகள் காரணமாக அதிகாரபூர்வமாக அந்த நிலைமைக்கு வர தங்களுக்கு இன்னும் காலதாமதம் ஆகலாம் என்றும் ஏர் ஆசியா அறிவித்தது.
தங்களின் வெளிக் கணக்காய்வாளர்கள் எர்னஸ் அண்ட் யங் (Messrs Ernst & Young PLT) 31 டிசம்பர் 2019 வரையிலான நிதியாண்டுக்கென வழங்கியிருக்கும் கணக்குத் தணிக்கையறிக்கை மீதான ஆலோசனை காரணமாகவே தாங்கள் பிஎன்17 வரையறைக்குள் உட்படுத்தப்பட்டிருப்பதாக ஏர் ஆசியா தெரிவித்தது.
அடுத்த 12 மாதங்களுக்குள் நிலைமையைச் சரிசெய்ய, அரசாங்க, கோலாலம்பூர் பங்குச் சந்தை நடைமுறைப்படி தங்களுக்கு கால அவகாசம் இருப்பதாகவும் ஏர் ஆசியா தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை காலையில் அதன் பங்குகள் பரிமாற்றம் பங்குச் சந்தையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மீண்டும் மதிய இடைவேளைக்குப் பின்னர் ஏர் ஆசியா பங்குகள் பட்டியலிப்பட்டபோது, 17.54 விழுக்காடு சரிவு கண்டு பங்கு ஒன்று 70 காசுகளாக பரிமாற்றம் கண்டது.