Home One Line P1 அமானா தலைமையகத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

அமானா தலைமையகத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

681
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இங்குள்ள அமானா கட்சியின் தலைமையகத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் இன்று அதிரடியாக நுழைந்து சோதனைகள் நடத்தியது என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் முகமட் ஹட்டா ரம்லி இன்று புதன்கிழமை (ஜூலை 8) உறுதிப்படுத்தினார்.

அமானா கட்சித் தலைவரும் முன்னாள் தற்காப்புத் துறை அமைச்சருமான முகமட் சாபுவின் உதவி அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நம்பிக்கைக் கூட்டணியில் ஓர் அங்கமாக அமானா கட்சி இடம் பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

தற்காப்பு அமைச்சின் மூலம் வழங்கப்பட்ட 56 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய குத்தகை ஒன்றின் தொடர்பில் கையூட்டு வழங்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் முகமட் சாபுவின் உதவியாளர் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்தே சோதனை நடவடிக்கைகள் அமானா தலைமையகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டன.

“இன்று காலையில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சோதனைக்கான ஆணை எதனையும் ஊழல் தடுப்பு ஆணையம் விஸ்மா அமானா நெகாரா தலைமையகத்தில் காவலில் இருந்த காவலாளிகளிடம் காட்டவில்லை” என முகமட் ஹட்டா இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்

சோதனைக்கான ஆணை எதுவும் இருக்கிறதா எனக் கேட்கப்பட்டபோது, அதற்கான ஆவணம் தாங்கள் கூட்டி வந்த, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரிடம், காட்டப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் முகமட் ஹட்டா கூறினார்.

“ஊழல் தடுப்பு ஆணையம் தங்களின் விசாரணை நடவடிக்கையில் நடுநிலையோடும், தொழிலுக்குரிய பண்புகளோடும் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கை தகுதிக்கு மீறியதாக இருக்கிறது” எனவும் முகமட் ஹட்டா தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட உதவியாளர் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தனது ஒத்துழைப்பை வழங்குவார் என்ற முகமட் ஹட்டா, வெளிப்படைத் தன்மையுடனும் நியாயமாகவும் ஆணையம் நடந்து கொள்ளவில்லை என்றால் இந்த வழக்கு அரசியல் நோக்கத்தோடு தொடுக்கப்படுகிறது என்ற தோற்றம் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் முகமட் சாபுவின் உதவியாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று கைது செய்து தடுத்து வைத்துள்ளது. அவருக்கு ஆறு நாட்கள் தடுப்புக் காவல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

நேற்றிரவு சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

தனது திவால் நிலையைத் தீர்ப்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து 800,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையைப் அவர் பெற்றார் என்ற குற்றச்சாட்டில், 2018- ஆம் ஆண்டில் அந்த அதிகாரி மீது விசாரணையை எம்ஏசிசி தொடங்கியது.

“பல தரப்புகளால் அவரது 800,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட கடன்கள் செலுத்தப்பட்டதற்காக அவர் எம்ஏசிசியால் விசாரிக்கப்பட்டார். முகமட் சாபு தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் அவரது பெயரில் பணம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது” என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்காப்பு அமைச்சின் குத்தகை ஒன்றை கடந்த ஆகஸ்ட் 2019-இல் நேரடிப் பேச்சுவார்த்தைகளின் மூலமாக வழங்கப்பட்டது தொடர்பில் அந்த உதவியாளர் மில்லியன் கணக்கான கையூட்டைப் பெற்றதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.

கைது செய்யப்பட்ட அந்த உதவியாளரிடமிருந்து 70 ஆயிரம் ரிங்கிட் ரொக்கமும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.