Home One Line P2 சிங்கப்பூர் தேர்தல் : வெற்றி பெற்ற இந்திய நாடாளுமன்ற வேட்பாளர்கள்

சிங்கப்பூர் தேர்தல் : வெற்றி பெற்ற இந்திய நாடாளுமன்ற வேட்பாளர்கள்

1014
0
SHARE
Ad

(நேற்று வெள்ளிக்கிழமை ஜூலை 10 நடந்து முடிந்த சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய நாடாளுமன்ற வேட்பாளர்கள், அவர்களின் பின்னணி குறித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் அரசியல் பார்வை)

சிங்கப்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடந்து முடிந்த சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சியின் சார்பில் இந்தியர்களில் புதிய முகங்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

கடந்த தவணையில் அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களே மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

புதிய இந்திய அரசியல்வாதிகள் யாரையும் பிஏபி கட்சி அறிமுகப்படுத்தாதது சில சலசலப்புகளையும், கேள்விகளையும் சிங்கப்பூர் இந்தியர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

சுமார் 8.5 விழுக்காடு இந்தியர்களை மக்கள் தொகையாகக் கொண்டது சிங்கப்பூர். பல இந்தியர்கள் அதிபர், அமைச்சர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பதவி வகித்திருக்கின்றனர்.

கடந்த நாடாளுமன்றத்தில் 9 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் 10 விழுக்காடாகும்.

கடந்த முறை பிஏபி கட்சியால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நிறுத்தப்பட்டவர்களே இந்த முறையும் மீண்டும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஏன் புதுமுக இந்தியர்கள் இல்லை – பிரதமரின் விளக்கம்

இந்த முறை ஏன் ஆளும் பிஏபி கட்சியில், புதுமுக இந்தியர்கள்  அறிமுகப் படுத்தப்படவில்லை என்பதற்கு பிரதமர் லீ சியன் லூங்கும் விளக்கமளித்துள்ளார்.

“ஏற்கனவே இருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாரும் பதவி விலகவில்லை என்பதால் புதுமுகங்களை இந்த முறை நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை. எனினும் இந்திய சமூகம் சிங்கப்பூர் அரசாங்கத்தில் நல்ல முறையில் தொடர்ந்து பிரதிநிதிக்கப்படும்” என அவர் உறுதியளித்தார்.

சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வேட்பாளர்கள்

# 1 – ஜூரோங் குழுத் தொகுதியில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்தினம்

சிங்கை அரசில் லீ சியன் லூங் அமைச்சரவையில் துணைப் பிரதமராகப் பணியாற்றியவர் தர்மன் சண்முகரத்தினம். பொருளாதார நிபுணர். அடுத்த சிங்கப்பூர் பிரதமராக வரக் கூடிய ஆற்றல் நிறைந்தவர் எனக் கணிக்கப்படுபவர்.

ஜூரோங் நாடாளுமன்ற குழுத்தொகுதியில் (ஜிஆர்சி) போட்டியிட்ட தர்மன் சண்முகரத்தினம் 74.62 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ரெட் டோட் யுனைடெட் கட்சி போட்டியிட்டது.

63 வயதான தர்மன் சண்முகரத்தினம் லீ சியன் லூங்கின் அமைச்சரவையில் மீண்டும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

# 2 – நீ சூன் தொகுதியில் வெற்றி பெற்ற கே.சண்முகம்

சிங்கை அமைச்சரவையில் சட்டம், உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய வழக்கறிஞர் கே.சண்முகம் நீ சூன் நாடாளுமன்றக் குழுத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

61.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று சண்முகம் மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிஎஸ்பி எனப்படும் புரொக்ரெசிவ் சிங்கப்பூர் பார்ட்டி 38.1 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றது.

புதிய இந்திய வேட்பாளர்கள் யாரையும் பிஏபி இந்த முறை அறிமுகப்படுத்தாது ஏன் என சண்முகத்திடம் தேர்தலுக்கு முன்பாக ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “பிஏபி கட்சியில் திறமைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இன ரீதியாக யாரும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இருப்பினும் பல இன நாடான சிங்கப்பூரில் அனைத்து இனங்களும் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் உணர்கிறோம்” என்றார்.

# 3 – வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் வெற்றி பெற்ற தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்

மிகக் கடுமையான போட்டிக்கிடையில் வெற்றி பெற்றிருக்கிறார் வெஸ்ட் கோஸ்ட் நாடாளுமன்றக் குழுத் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.ஈஸ்வரன். கடந்த அமைச்சரவையில் தொடர்பு, தகவல் அமைச்சராகப் பதவி வகித்தவர் எஸ்.ஈஸ்வரன்.

வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் மக்கள் செயல் கட்சி 51.69% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இங்கே எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி எனப்படும் புரொக்ரெசிவ் சிங்கப்பூர் பார்ட்டி) 48.31% வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டது.

மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருக்கிறார் ஈஸ்வரன். காரணம், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளரான டாக்டர் டான் செங் போக் தலைமையிலான குழு இங்கு போட்டியிட்டதுதான்!

நீண்ட காலமாக பிஏபி கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டான் செங் போக் அண்மையில் தனிக் கட்சி தொடங்கியிருக்கிறார். இந்தக் கட்சியில்தான் லீ குவான் இயூவின் இளைய மகன் லீ சியன் யாங் இணைந்திருக்கிறார்.

# 4 – தஞ்சோங் பாகார் தொகுதியிலிருந்து பிரதமர் துறை அமைச்சர் இந்திராணி ராஜா

கடந்த அமைச்சரவையில் பிரதமர் துறை அமைச்சராக இருந்தவர் இந்திராணி ராஜா என்ற 57 வயது இந்தியப் பெண்மணி அரசியல்வாதி. 2001 முதல் தஞ்சோங் பாகார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறார். இவர் ஒரு வழக்கறிஞருமாவார்.

மீண்டும் தஞ்சோங் பாகார் குழுத் தொகுதியில் வாணிப, தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் தலைமையில் போட்டியிட்ட இந்திராணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்தத் தொகுதியில் பிஏபி வேட்பாளர்கள் 63.13 விழுக்காடு வாக்குகளைப் பெற்றனர்.

# 5 – ஹோல்லண்ட்-புக்கிட் தீமா தொகுதியில் வெற்றி பெற்ற வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்

கடந்த அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் விவியன் பாலகிருஷ்ணன். 59 வயதான இவரது தலைமையில் ஹோல்லண்ட்-புக்கிட் தீமா நாடாளுமன்றக் குழுத் தொகுதியில் போட்டியிட்ட பிஏபி வெற்றி பெற்றது.

66.36 விழுக்காடு வாக்குகளை பிஏபி வேட்பாளர்கள் பெற்றனர். இவர்களை எதிர்த்து எஸ்டிபி எனப்படும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி போட்டியிட்டது. 33.64 விழுக்காட்டு வாக்குகளையே எஸ்டிபி இந்தத் தொகுதியில் பெற்றது.

எஸ்டிபி கட்சியின் சார்பில் இங்கு போட்டியிட்ட அதன் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜூவான், அந்தக் கட்சியின் தலைவர் பேராசிரியர் பால் தம்பையா இருவரும் இந்தத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றனர்.

# 6 – புக்கிட் பாத்தோக் தொகுதியில் வெற்றி பெற்ற முரளி பிள்ளை

புக்கிட் பாத்தோக் தனிநபர் தொகுதியில் 54.80 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் முரளி பிள்ளை. 53 வயதான இவர் சிங்கப்பூர் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றி அதன் பின்னர் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.

இவரை எதிர்த்து எஸ்டிபி சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் (சிங்கப்பூர் டெமொக்ரெடிக் பார்ட்டி) தலைமைச் செயலாளர் சீ சூன் ஜூவான் போட்டியிட்டார். கடந்த முறையை விட கூடுதலான வாக்குகளை எதிர்க்கட்சி இங்கு பெற்றிருந்தாலும் இறுதியில் முரளி பிள்ளையே வெற்றி பெற்றார்.

2016-இல் நடைபெற்ற புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முரளி பிள்ளை தொடர்ந்து இரண்டாவது தவணையாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று அதைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

# 7 – பாசிர் ரிஸ்-புங்கோல் தொகுதியில் வெற்றி பெற்ற ஜனில் புதுச்சேரி

மலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றவரான ஜனில் புதுச்சேரி பாசிர் ரிஸ்-புங்கோல் நாடாளுமன்றக் குழுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 48 வயதான ஜனில் புதுச்சேரி ஒரு மருத்துவராவார்.

பிரிட்டனில் மருத்துவம் பயின்று, பின்னர் அங்கேயே பணிபுரிந்த அவர் சிங்கப்பூர் சென்று பணியாற்றி நாளடைவில் அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றார்.

5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுத் தொகுதியில் சிங்கை அமைச்சர் தியோ சீ ஹியான் தலைமையில் ஜனில் புதுச்சேரி போட்டியிட்டார்.

இந்தத் தொகுதியில் 64.15 விழுக்காடு வாக்குகளை பிஏபி வேட்பாளர்கள் பெற்றனர்.

2011 முதல் இந்தத் தொகுதியில் ஜனில் புதுச்சேரி போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறார்.

# 8 – செம்பவாங் குழுத் தொகுதியில் வெற்றி பெற்ற விக்ரம் நாயர்

செம்பவாங் நாடாளுமன்றக் குழுத் தொகுதியில் போட்டியிட்ட பிஏபி கட்சி 67.29 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. அந்தத் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக விக்ரம் நாயர் வெற்றி பெற்றிருக்கிறார்.

பிஏபி கட்சியை எதிர்த்து இங்கே போட்டியிட்டது நேஷனல் சோலிடாரிடி கட்சியாகும் (என்எஸ்பி). 32.71 விழுக்காட்டு வாக்குகளை மட்டுமே எதிர்க்கட்சி இங்கே பெற்றது.

41 வயதான விக்ரம் நாயர் ஒரு வழக்கறிஞராவார்.

# 9 – அல்ஜூனிட் குழுத் தொகுதியில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பிரித்தாம் சிங்

ஆளும் பிஏபி கட்சியிலிருந்து மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகளிலும் பல இந்தியர்கள் சிங்கப்பூர் தேர்தலில் போட்டியிட்டார்கள்.

சிங்கப்பூரின் முதல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான காலஞ்சென்ற ஜெயரத்தினத்தின் புதல்வர் கென்னத் ஜெயரத்தினம் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியவில்லை.

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைமைச் செயலாளரான பிரித்தாம் சிங் மட்டும் அல்ஜூனிட் நாடாளுமன்றக் குழுத் தொகுதியில் போட்டியிட்டு ஒரே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

மற்றொரு குழுத் தொகுதியான செங்காங்கிலும் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று மொத்தமுள்ள 93 நாடாளுமன்ற இடங்களில் 10 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

நாடாளுமன்ற நியமன உறுப்பினர்களிலும் இந்தியர்கள் இடம் பெறலாம்

சிங்கப்பூர் சட்டங்களின்படி பொதுத் தேர்தல் முடிந்ததும் தோல்வியடைந்த வேட்பாளர்களில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் தொகுதியில்லாத – நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாக – செயல்பட முடியும். எதிர்க்கட்சிகளில் இருந்துதான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அந்த வகையில் புதிய நாடாளுமன்றத்தில் இடம் பெறவிருக்கும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சில இந்தியர்களும் இடம் பெற வாய்ப்பிருக்கிறது.

-இரா.முத்தரசன்