Home One Line P1 லங்காவியில் மஇகாவின் தேர்தல் வியூக முகாம்

லங்காவியில் மஇகாவின் தேர்தல் வியூக முகாம்

957
0
SHARE
Ad

லங்காவி : விரைவில் நடைபெறவிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ம.இ.கா தனது மத்திய செயலவை உறுப்பினர்களுடன் லங்காவி தீவில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வியூகக் கலந்துரையாடல் முகாமைத் தொடங்கியது.

நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்ற அறிகுறிகள் தென்பட்டு வரும் வேளையில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில் லங்காவி தீவில் தனது மத்திய செயலவை உறுப்பினர்களுடன் வியூக முகாம் பயிற்சி பட்டறையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா இழந்த தொகுதிகளை மீட்கும் வகையில் இந்த வியூக முகாம் பயிற்சிப் பட்டறையை விக்னேஸ்வரன் தலைமையேற்று நடத்தினார். அவருடன் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் இணைந்து வழிநடத்தினார்.

#TamilSchoolmychoice

இந்த வியூக முகாம் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்கள் தத்தம் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்கள் குறித்து ஆய்வு செய்து இந்த வியூக பயிற்சி முகாமில் தங்கள் கருத்துக்களை முன் வைத்து முக்கிய அம்சமாகப் பேசினர்.

ம.இ.காவின் பாரம்பரிய தொகுதிகளான 9 நாடாளுமன்றம், 18 சட்டமன்றங்களைத் தவிர்த்து மற்ற தொகுதிகளில் ம.இ.கா வேட்பாளர்கள் போட்டியிட்டால் அதன் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்தும் மத்திய செயலவை உறுப்பினர்கள் தொகுதிவாரியாகப் பேசினர். இந்த தொகுதிகள் தொடர்பில் ம.இ.கா மிகத்தெளிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா போட்டியிடும் தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவலாம் என்றாலும் அதில் வெற்றி வாகை சூடுவதற்கான நடவடிக்கைகளை ம.இ.கா தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், தொகுதித் தலைவர்கள், கிளைத் தலைவர்கள் தங்கள் சேவையின் வழி உறுதி செய்து வருகின்றனர்.

ம.இ.கா போட்டியிடும் ஒரு தொகுதியில் இந்தியர்களின் வாக்குகள், மற்ற இனங்களின் வாக்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் தேர்தல் ஆணையத்தின் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் ம.இ.கா எந்த நிலையில் யாரோடு கைக்கோர்த்தால் இந்தியர்களுக்கு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற கொள்கையை முன்வைத்து இந்த வியூக முகாம் பயிற்சி பட்டறையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்கள் மாநில ரீதியாக 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ம.இ.காவின் பலம், போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்து ஆராயப்பட்டது.

இந்த வியூக முகாம் பயிற்சிப் பட்டறையில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், தேசிய உதவித் தலைவர்கள் டத்தோ டி.மோகன், சிவராஜ் சந்திரன், டத்தோ டி.முருகையா, மத்திய செயலை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

லங்காவி மஇகா வியூகம் முகாம் தொடர்பான படக்காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம் :