சென்னை: ஜன.25-நடிகர் கமல் நடித்துள்ள, “விஸ்வரூபம்’ படம் வெளியிடுவதை, இம்மாதம், 28ம் தேதி வரை, சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. இம்மாதம், 26ம் தேதி, படத்தை பார்த்து உத்தரவு பிறப்பிப்பதாக, நீதிபதி தெரிவித்துள்ளார்.
அரசின் முடிவுக்கு தடை விதிக்காததால், இன்று, விஸ்வரூபம் படம் வெளியாக வாய்ப்பில்லை.
கமல் நடித்துள்ள, விஸ்வரூபம் படம், சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிறுபான்மையினரின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, படத்தில் காட்சிகள் உள்ளன என, முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
கமிஷனர் மற்றும் பிற மாவட்டங்களில், கலெக்டர்களும், உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.படத்தை வெளியிடுவதில், குறுக்கீடு செய்யக் கூடாது என்றும், இதற்கு தடை விதிக்கக் கோரியும், ஐகோர்ட்டில், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார்.
இதையடுத்து கலெக்டர் தீபக்குமார், விஸ்வரூபம் திரைப்படத்தை இரண்டு வாரங்களுக்கு திரையிடக் கூடாது என, தடை விதித்து, நேற்று உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
கமல் வேதனை
“விஸ்வரூபம்” பட பிரச்னையில் சிறு குழுக்கள், அரசியல் வாழ்வும், லாபமும் பெற நினைக்கின்றன. விஸ்வரூபம் படத்தை பார்க்கும் நடுநிலையான தேசப்பற்றுள்ள, எந்த ஒரு முஸ்லிமும், பெருமையாகத் தான் கருதுவர்” என, கமல் தெரிவித்துள்ளார்.
படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில், விஸ்வரூபம் படத்தை காட்ட சென்றுள்ள கமலஹாசன், அமெரிக்காவிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
“விஸ்வரூபம் படத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், திடீரென இந்தப்படம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானதாக உருவாக்கப்
பட்டுள்ளதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இது எனக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இப்படம், எந்த வகையில் முஸ்லிம்களுக்கு எதிரானது என, எனக்கு தெரியவில்லை. ஒரு நடிகன் என்ற முறையில், என் கடமைக்கும், பல படி மேலாக சென்று, மனிதாபிமான முறையில், முஸ்லிம் சமுதாயத்திற்காக குரல் கொடுத்துள்ளேன். இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கான இந்தியா அமைப்பில், நான் உறுப்பினராக உள்ளேன்.
“என் படம் மூலம், ஒரு மதத்தை அவமரியாதை செய்து விட்டதாக, என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்னை காயப்படுத்தி உள்ளன. என்னை ஈவு இரக்கம் இல்லாமல், ஒரு கருவி போல பயன்படுத்தி, சிறு குழுக்கள் அரசியல் வாழ்வும், லாபமும் பெற நினைக்கின்றன. விஸ்வரூபம் படத்தை பார்க்கும் நடுநிலையான, தேசப்பற்றுள்ள எந்த ஒரு முஸ்லிமும் நிச்சயம், படத்தை பெருமையாகத்தான் கருதுவர். அந்த நோக்கத்துக்காகத் தான், இந்தப் படமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.படத்திற்கு எதிரான தடையை சட்டப்படி சந்திப்பேன். இதுபோன்ற கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இணையதளம் வாயிலாக எனக்கு ஆதரவு தெரிவித்துள்ள, அனைவருக்கும் நன்றி”
மேற்கண்டவாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.