இஸ்லாமாபாத், ஏப்ரல் 13- பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, ராவல்பிண்டி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் பதவியிழந்த முஷாரப் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டார்.
பூட்டோ கொலை வழக்கில், அப்போது பாகிஸ்தானை ஆட்சி செய்த முஷாரப்புக்கு தொடர்பு இருப்பதாக 2011-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று ராவல்பிண்டி அடியாலா சிறைச்சாலையில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்ற மூடப்பட்ட அரங்கில் நடந்தது.
ஆனால் தேர்தலை முன்னிட்டு நாடு திரும்பியுள்ள முஷாரப் இந்த விசாரணையில் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராக, இரண்டு முறை சம்மன் அளிக்கப்பட்டும், இந்த வழக்கில் முஷாரப் ஆஜராகாததால் அவரும் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களும் வரும் 23-ம் விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராகாத முஷாரப்பை, அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது.